அஜித் வழக்கு : ‘ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கணும்’ தமிழக அரசுக்கு முக்கிய உத்தரவு போட்ட ஐகோர்ட்!
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித் குமார் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு அஜித்குமார் குடும்பத்தினருக்கு ரூபாய் 25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (29), 2025 ஜூன் 27 அன்று நகை திருட்டு வழக்கு தொடர்பாக திருப்புவனம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணையின்போது, காவலர்கள் அவரை கடுமையாகத் தாக்கியதில் உயிரிழந்தார். உடற்கூராய்வு அறிக்கையில், அஜித்குமாரின் உடலில் 44 இடங்களில் காயங்கள் இருந்தது தெரியவந்தது, இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், காவல்துறை மீது கடும் கண்டனத்தையும் ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டு, தமிழக அரசு வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றியது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, 2025 ஜூலை 22 அன்று, அஜித்குமாரின் குடும்பத்துக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. முன்னதாக, தமிழக அரசு அஜித்குமாரின் குடும்பத்துக்கு ரூ.7.5 லட்சம் இழப்பீடு, அவரது சகோதரர் நவீன்குமாருக்கு காரைக்குடி ஆவின் நிறுவனத்தில் தொழில்நுட்புநர் பணி, மற்றும் 3 சென்ட் இலவச வீட்டு மனை வழங்கியிருந்தது.
ஆனால், இந்த இழப்பீடு போதுமானதல்ல எனக் கருதி, கூடுதலாக ரூ.25 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், கூடுதல் இழப்பீடு தேவைப்பட்டால், மனுதாரர் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். வழக்கு விசாரணையின்போது, நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் ஏ.டி. மரியா கிளீட் அமர்வு, காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியது. “நகை திருட்டு வழக்கில் விசாரணை என்ற பெயரில் ஒருவரை அடித்துக் கொலை செய்யலாமா? அஜித்குமார் தீவிரவாதியா?” என நீதிபதிகள் காட்டமாகக் கேள்வி எழுப்பினர்.
விசாரணையில் காவலர்கள் பைப், கம்புகள், மிளகாய்ப் பொடி ஆகியவற்றைப் பயன்படுத்தி அஜித்குமாரை மிருகத்தனமாகத் தாக்கியதாகவும், உடற்கூராய்வு அறிக்கை வெளிப்படுத்தியதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது. இந்த வழக்கில் ஐந்து காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மனுவை விசாரித்து, ஏழு நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும், வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும், சிசிடிவி காட்சிகளையும் பாதுகாக்க வேண்டும் எனவும், மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் நடத்திய விசாரணை அறிக்கையை சிபிஐ-யிடம் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டது. சிபிஐ, இந்த வழக்கை பி.என்.எஸ். சட்டப் பிரிவு 103-இன் கீழ் கொலை வழக்காகப் பதிவு செய்து, டில்லி டிஎஸ்பி மோஹித்குமார் தலைமையில் விசாரணையைத் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.