ட்விட்டர் கணக்குகள் முடக்கம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

சீமான், திருமுருகன் காந்தியின் ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது என முதல்வர் ட்வீட்.
கடந்த சில மாதங்களாக பிரபல சமூகவலைத்தளமான ட்விட்டரில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வந்தாலும், மறுபக்கம் இந்தியாவில் உள்ள பலருடைய ட்விட்டர் கணக்குகள் தடை செய்யப்பட்டு வருகிறது. இதில், குறிப்பாக சர்ச்சைக்குரிய மற்றும் வன்முறையை தூண்டும் வகையில் ட்விட் செய்பவர்களின் கணக்குகள் முடக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமானின் @SeemanOfficial என்ற அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு முடக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த பக்கத்தில், சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று சீமானின் அதிகாரப்பூர்வ கணக்கு இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என ட்விட்டர் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. அதேபோல் நாம் தமிழர் கட்சியின் பல்வேறு நிர்வாகிகளின் ட்விட்டர் பக்கங்களும் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது என முதல்வர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.
கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல, ட்விட்டர் முடக்கத்தை விலக்கிச் சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு. திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.
கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல.…
— M.K.Stalin (@mkstalin) June 1, 2023