90 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து சாதனை படைத்த ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா!
ஈட்டி எறிதலில் புதிய சாதனை படைத்த நீரஜ் சோப்ராவுக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். கத்தாரில் நடைபெற்ற டைமண்ட் லீக் தொடரில், முதன்முறையாக 90 மீட்டருக்கு மேல் ஈட்டியை எறிந்து அசத்தினார். ஈட்டி எறிதலில் முதல்முறையாக 90 மீ.க்கு மேல் எறிந்து புதிய சாதனை படைத்துள்ளார். 90.23 மீட்டர் தூரம் எறிந்து இந்த மாபெரும் சாதனையைப் பதிவு செய்த நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இதற்கு முன், 2022 ஆம் ஆண்டு ஸ்டாக்ஹோம் டைமண்ட் லீக் போட்டியில் நீரஜ் 89.94 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து தனது சிறந்த சாதனையைப் பதிவு செய்திருந்தார். இந்தத் தூரம் அப்போது அவரது தனிப்பட்ட சிறந்த முயற்சியாக இருந்தது. ஆனால், இப்போது 90 மீட்டர் தாண்டியதன் மூலம், அவர் தனது சொந்த சாதனையை முறியடித்து, புதிய உயரத்தை எட்டியுள்ளார்.
நீரஜ் சோப்ராவின் இந்த சாதனை, இந்திய விளையாட்டு வரலாற்றில் முக்கியமான மைல்கல் ஆகும். ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய தடகள வீரர் என்ற பெருமையை ஏற்கனவே பெற்றவர் நீரஜ். இப்போது, 90 மீட்டர் தாண்டிய முதல் இந்திய வீரர் என்ற புதிய பெருமையையும் சேர்த்துள்ளார்.
அவருடைய இந்த சாதனை இளம் விளையாட்டு வீரர்களுக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளிக்கும்.இனிவரும் போட்டிகளிலும் அவர் இதே உத்வேகத்துடன் மேலும் பல சாதனைகளைப் படைப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து அவருக்கு சமூக வலைத்தளங்களில் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.