Cauvery Issue : கர்நாடகா பொய் கூறுகிறது.! அனைத்து கட்சி எம்பிக்களும் மனு அளிக்க உள்ளார்கள்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!

CM MK Stalin

கர்நாடகா அரசு காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கடந்த சில மாதங்களாகவே உச்ச நீதிமன்ற உத்தரவுபடி தர வேண்டிய குறிப்பிட்ட அளவு தண்ணீரை தராமல் இருந்து வருகிறது. இதனால் தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசு , காவிரி ஒழுங்காற்று மையம், காவிரி மேலாண்மை வாரியம் ஆகியவற்றில் முறையிட்டு வருகிறது. கடந்த 12ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று வாரியமானது அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் வீதம் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து அடுத்த நாள், பெங்களூரூவில் காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காவிரி ஒழுங்காற்று மையத்தின் உத்தரவுபடி, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும்,  இது குறித்து காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் முறையிட உள்ளதாகவும் கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறுகையில், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நீர் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக எங்களால் காவிரி ஒழுங்காற்று மைய உத்தரவுபடி தமிழகத்திற்கு 5000 கனஅடி நீர் திறந்து விட முடியாது என கூறினார் மேலும் இதுகுறித்து நேற்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங்கை நேரில் சந்தித்து காவேரி நதிநீர் பங்கீடு தொடர்பாக கர்நாடக அரசின் கோரிக்கைகளை முன்வைத்தார்.

அப்போது  மத்திய அமைச்சரிடம் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டிகே.சிவகுமார் கூறுகையில், காவேரியில் தற்போது போதிய அளவு தண்ணீர் இல்லை. அங்குள்ள இருப்பு குடிநீர் தேவைக்கு கூட பத்தாத நிலை உள்ளது.  இந்த ஆண்டு தண்ணீர் பற்றாக்குறை உள்ள வறட்சி ஆண்டாக இருக்கிறது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை குறிப்பிட்டுள்ளார்.  இந்நிலையில் தான் வரும் திங்கள் (செப்டம்பர் 18) அன்று காவிரி மேலாண்மை வாரியத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெ உள்ளது.
காவிரியில் இருந்து உரிய அளவு தண்ணீரை கரநாட்க அரசு திறந்துவிடாததை குறிப்பிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், காவிரி நதிநீர் பிரச்சினையில் நீண்டகால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, ஒரு சராசரி ஆண்டில் பில்லிகுண்டுலுவில் கர்நாடகா வழங்க வேண்டிய மாதாந்திர நீர் அளவின் கால அட்டவணை, உச்ச நீதிமன்றத்தின் 16.02.2018 தேதியிட்ட தீர்ப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது.
மேலும், 05.02.2007 தேதியிட்ட காவிரி நடுவர் மன்றத்தின் (CWDT) இறுதித் தீர்ப்பு மற்றும் 16.02.2018 தேதியிட்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, பற்றாக்குறை ஆண்டில், அதற்கேற்ற விகிதாச்சார (pro rata sharing) அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு இடையே நீர் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டில் 14.09.2023 வரை தமிழ்நாட்டிற்கு அளிக்கப்பட வேண்டிய 103.5 டி.எம்.சியில் 38.4 டி.எம்.சி. மட்டுமே கிடைத்துள்ளது. இது 65.1 டி.எம்.சி குறைவு ஆகும்.
மேட்டூர் நீர்த்தேக்கத்தின் 69.25 டி.எம்.சி. நீர் இருப்பு, இந்திய வானிலை ஆய்வுத்துறையின் (IMD) இயல்பான மழைப்பொழிவு அறிக்கை மற்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளின் அடிப்படையில் பெறப்பட வேண்டிய நீர் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, குறுவை பயிரிடுவதற்கும், சம்பா பயிர்களுக்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்குவதற்கும் ஏதுவாக, 12.06.2023 அன்று நீர் திறக்கப்பட்டது. கர்நாடகா அரசு, தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய பங்கை, விகிதாச்சாரப்படி கூட விடுவிக்காததாலும், உச்சநீதிமன்ற ஆணையின்படி ஏற்படுத்தப்பட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு (CWRC) ஆகியவற்றால் இதற்குத் தீர்வு காண முடியாமல் போனது .
இதன் காரணமாக, தமிழ்நாடு அரசு 14.08.2023 அன்று உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தது. இம்மனு தற்போது உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், தமிழ்நாட்டின் கோரிக்கை நியாயமற்றது என்றும், தமிழ்நாடு தனது ஆயக்கட்டை அதிகபடுத்தி உள்ளது என்றும் ஆதாரமற்ற அறிக்கைகளை கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது.
மேலும், கர்நாடக அரசு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அவர்களுக்கு 13.09.2023 அன்று எழுதிய கடிதத்தில், தமிழ்நாட்டிற்கு வடகிழக்கு பருவமழை காலத்தில் போதுமான மழை கிடைக்கும் எனவும், காவிரி டெல்டாவில் தேவையான அளவு நிலத்தடிநீர் இருக்கிறது எனவும் தவறான கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள். இத்தகைய உண்மைக்கு புறம்பான அறிக்கைகளை ஒன்றிய அரசு கருத்தில் கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தி ஒரு கோரிக்கை மனுவை (Memorandum) அளிக்க உள்ளோம்.
மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அவர்களிடம் தமிழ்நாட்டின் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அளிக்க உள்ளார்.  தற்போது, 13.09.2023 முதல் 15 நாட்களுக்கு, கர்நாடக காவிரிப் பகுதியில் சராசரி இயல்பான மழை இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு துறை (IMD) அறிக்கையின் அடிப்படையில் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு (CWRA) கணித்துள்ள நிலையில்,
தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 12,500 கனஅடி நீரை கர்நாடகா விடுவித்திட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) உத்தரவிட வேண்டும் என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அவர்கள் ஆணையத்திற்கு அறிவுறுத்த வேண்டும் என்றும், CWMA/CWRC அளித்த உத்தரவின்படி தமிழ்நாட்டிற்கு குறிப்பிட்டுள்ள நீரை குறித்த காலத்தில் வழங்குமாறு கர்நாடகாவிற்கு தகுந்த அறிவுரையை வழங்கிட வேண்டும் என்றும் இம்மனுவில் வலியுறுத்தப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்