வெளியானது 10ம் வகுப்பு ரிசல்ட்! அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற டாப் 5 மாவட்டம்?
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக சதவிகித தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் சிவகங்கை முதலிடம் பிடித்துள்ளது.

சென்னை : தமிழகத்தில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் மே 16 (இன்று) காலை 9:00 மணிக்கு வெளியிடப்பட்டன. இந்த ஆண்டு 10-வகுப்பு போது தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றது. தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என மாணவர்கள் காத்திருந்த நிலையில், இன்று வெளியானது.
எப்படி பார்க்கலாம்?
மாணவர்கள் தங்கள் முடிவுகளை பின்வரும் இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம் www.results.digilocker.gov.in , https://tnresults.nic.in/ அதைப்போலவே, மாணவர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு முடிவுகள் நேரடியாக SMS மூலம் அனுப்பப்படும். அப்படி இல்லை என்றால், மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளில் முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும். மைய மற்றும் கிளை நூலகங்களிலும் முடிவுகளை இலவசமாக பார்க்கலாம்.
தேர்ச்சி விகிதம் எவ்வளவு?
2024-2025 ஆண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 91.55% மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது கடந்த ஆண்டை (2023-2024) விட 2.25% அதிகமாகும், இது மாணவர்களின் முன்னேற்றத்தையும் கல்வித்துறையின் மேம்பாட்டையும் எடுத்துக்காட்டுகிறது. மாணவிகள் மாணவர்களை விட 5.95% அதிக தேர்ச்சி விகிதத்துடன் சிறப்பாக செயல்பட்டனர். மொத்தம் 4,22,591 மாணவிகளும், 3,96,152 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.
அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற மாவட்டங்கள்
இந்த ஆண்டு தேர்வில் மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதத்தில் சிவகங்கை மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதைப்போல, பின்வரும் மாவட்டங்கள் முதல் ஐந்து இடங்களைப் பெற்றன:
- சிவகங்கை – 98.31%
- விருதுநகர் – 97.45%
- தூத்துக்குடி – 96.76%
- கன்னியாகுமரி – 96.66%
- திருச்சி – 96.61%