தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 234 ஆக உயர்வு.!

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அறிவித்துள்ளார். ஏற்கனவே 124 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 110 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து 234-ஐ எட்டியுள்ளது. மேலும் இந்தியாவில் அதிக பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் தமிழகம் 3ம் இடத்தில உள்ளது.
இந்நிலையில் இன்று பாதிக்கப்பட்ட 110 பேரும் டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற தமிழகம் திரும்பியவர்கள் என்றும் மொத்தம் பாதிக்கப்பட்ட 190 பேரும் டெல்லியில் இருந்து தமிழக வந்தவர்கள் என தெரிவித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட 110 பேரும் 15 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையே நேற்று டெல்லியில் இருந்த வந்தவர்களை சோதனை செய்ததில் 50 பேருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ளவர்கள் தாங்களாகவே முன்வந்து மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று அரசு வேண்டுகோள் விடுத்தது. அந்த வகையில் இன்று 1103 பேர் தாமாக முன்வந்து மருத்துவமனையில் அனுமதி பெற்றனர் என்று பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.