லாட்டரி சீட்டு கும்பலால் தாக்கப்பட்ட DYFI மாவட்ட செயலாளர். நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய CPM மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்.!

லாட்டரி விற்பனை கும்பலால் தாக்கப்பட்ட DYFI மாவட்ட செயலாளரை மருத்துவமனையில் CPM மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சந்தித்தார்.
சேலம் மாவட்டம் கருங்கல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவர் அப்பகுதி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க (DYFI) மாவட்ட செயலாளராக பொறுப்பில் உள்ளார். இவர் சில தினங்களுக்கு முன்பு கருங்கல்பட்டி , தாதகாப்பட்டி கேட் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட், கஞ்சா போன்ற போதை வஸ்துக்கள் விற்கப்படுவதாக காவல்துறையினரிடம் கூறியுள்ளார். இதுகுறித்து எதிர்ப்பு பலகையையும் வைத்துள்ளார். புகாரின் பெயரில் நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் கூறியதாக தெரிகிறது.
இதனை அடுத்து, நேற்று முன்தினம் தாதகாப்பட்டி கேட் பகுதி அருகே தனது வாகனத்தில் பெரியசாமி வந்து கொண்டு இருந்த போது வந்த மர்ம கும்பல் அவரை தடுத்து பயங்கர ஆயுதங்களால் கடுமையாக தாக்கியுள்ளது. இதனை அடுத்து அவர் அங்கிருந்து தப்பி அருகில் உள்ள ஒரு வீட்டில் தஞ்சம் புகுந்து உயிர்பிழைத்தார். பின்னர் அங்கிருந்த அக்கம் பக்கத்தினர் பெரியசாமியை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
லாட்டரி சீட்டு விற்கும் கும்பலால் தாக்கப்பட்டு தற்போது மருத்துவமனை சிகிச்சையில் இருக்கும் DYFI மாவட்ட செயலாளர் பெரியசாமியை , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.