வங்க கடலில் இன்று உருவாகிறது புயல் – வானிலை ஆய்வு மையம்.!

வங்க கடலில்
நேற்று காலை தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே பகுதியில் நிலைகொண்டுள்ளது.
இந்நிலையில், வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை புயலாக வலுப்பெறுமென வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதால் கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனே கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இது மேலும் வட-வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுப்பெற்று நாளை காலை தீவிர புயலாகவும் நள்ளிரவு வாக்கில் மிகத்தீவிர புயலாகவும் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும்.
புயல் எங்கு கரையை கடக்கும்:
அதன் பிறகு வடக்கு-வட கிழக்கு திசையில் திரும்பி, 14ம் தேதி காலை தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை கடக்கக்கூடும். புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் மணிக்கு 110 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 130 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பொழிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.