“ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் ED சோதனை செய்ய அதிகாரம் இல்லை” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!
டாஸ்மாக் வழக்கில், சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் மூலம் சுமார் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு பணமோசடி நடந்ததாகவும், இதில் ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் அமலாக்கத்துறை சந்தேகிக்கிறது. இந்த வழக்கில் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் எஸ். விசாகன் உள்ளிட்ட பலரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
அமலாக்கத்துறை, டாஸ்மாக் பணமோசடி வழக்கு தொடர்பாக ஆகாஷ் பாஸ்கரனின் சென்னை அல்வார்பேட்டையில் உள்ள வீட்டிலும், அவரது அலுவலகத்திலும் திடீர் சோதனை நடத்தியது. இந்த சோதனையின்போது, மூன்று ஐபோன்கள், ஒரு மொபைல் போன், ஒரு லேப்டாப், இரண்டு எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்க்குகள், ஒரு ஹார்ட் டிரைவ் மற்றும் அல்வார்பேட், போயஸ் கார்டன் ஆகிய இடங்களில் உள்ள பிளாட்களின் வாடகை ஒப்பந்தங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து, தங்களது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைக்கு எதிராக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் மேல்முறையீடு செய்தனர். இதன் விசாரணையில், அமலாக்கத்துறைதாக்கல் செய்த ஆவணங்களில் போதிய ஆதாரங்கள் இல்லாததால், சோதனை நடத்த அதிகாரம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், டாஸ்மாக் வழக்கில், திரைத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் அவரது நண்பர் விக்ரம் ரவீந்திரன் மீது அமலாக்கத் துறையால் மேற்கொள்ளப்பட்ட மற்றும் மேற்கொள்ளப்படவிருந்த அனைத்து நடவடிக்கைகளுக்கும் இடைக்கால தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம். எஸ். ரமேஷ் மற்றும் வி. லக்ஷ்மிநாராயணன் ஆகியோர் உத்தரவு பிறப்பித்தனர்.