விசிகவுக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு
VCK: மக்களவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. கடந்த 20ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிந்தது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் காலை 11 மணியில் இருந்து மாலை 3 மணி வரை தேர்தல் அலுவலகங்களில் ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த நிலையில் விசிகவுக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது, அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் சின்னத்தை ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக பானை சின்னம் ஒதுக்கக்கோரி விசிக தலைவர் திருமாவளவன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் இன்று அந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. அதன்போது, விசிகவின் மனுவை பரிசீலித்து இன்றே முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் மக்களவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதை எதிர்த்து நாளை டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையிட விசிக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.