அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
வெளிநாட்டிற்கு தப்ப முயன்ற அவரை சென்னை விமான நிலையத்தில் வைத்து சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரது சகோதரி பொன்னரசி அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக சொல்லப்படுகிறது.
அதாவது, ராஜாவும் அவரது மனைவி அனுஷாவும், பொன்னரசியை அவர்களது நிறுவனமான ஒம்மீனா பார்மா டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் 16% பங்குகளை ஒதுக்குவதாக உறுதியளித்து முதலீடு செய்ய வைத்தனர்.
ஆனால், அவர்கள் பங்குகளை ஒதுக்கவில்லை என்றும், சொத்து ஆவணங்களை போலியாக உருவாக்கி ரூ.17 கோடி மோசடி செய்ததாகவும் பொன்னரசி குற்றம் சாட்டினார். இதுகுறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில், வெளிநாட்டுக்கு தப்ப முயன்றபோது போலீசார் கைது செய்துள்ளனர்.
ராஜா, தூத்துக்குடி மாநகராட்சியில் எதிர்க்கட்சி தலைவராகவும் உள்ளார். மேலும், அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கைது செய்யப்பட்ட ராஜாவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.