முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா மீண்டும் அதிமுகவில் இணைகிறார்.!

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மதுரையில் வரும் 20ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக மாநாடு குறித்தும், நாடாளுமன்ற தேர்தல், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் தொடர்பாக, விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா இன்று அதிமுகவில் இணைய உள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்து மீண்டும் சேரலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் இணைகிறார் அன்வர் ராஜா. எடப்பாடி பழனிசாமியை விமர்சித்ததுடன், சசிகலாவுக்கு ஆதரவாக பேட்டி அளித்ததால் கடந்தாண்டு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் அன்வர் ராஜா.
கடந்த 2001 – 2006 காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்துள்ளார். ராமநாதபுரம் மக்களவை தொகுதி எம்பியாகவும் அன்வர் ராஜா பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அக்கட்சியில் மீண்டும் இணைகிறார் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா.