ஆளுநர் மாளிகை சார்பில் இல்லாத திருக்குறளுடன் விருது.., சர்ச்சையில் ஆளுநர்.!

தமிழ்நாடு ஆளுநர் மாளிகை சார்பில் இல்லாத திருக்குறளை அச்சிட்டு மருத்துவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கிய விவகாரம் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Governor RN Ravi

சென்னை : ஆளுநர் மாளிகையில் கடந்த ஜூலை 13-ம் தேதி அன்று நடைபெற்ற மருத்துவர் தின நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 50 மருத்துவர்களுக்கு விருது வழங்கினார். இந்த விருதுகளில், திருக்குறளில் இல்லாத ஒரு குறள், “செருக்கறிந்து சீர்மை பயக்கும் மருப்பொடு மன்னுஞ்சொல் மேல்வையப் பட்டு” என்று அச்சிடப்பட்டிருந்தது.

அந்த திருக்குறளின் வரிசை எண் 944 என குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த திருக்குறள்தான் மிகப் பெரிய பேசுபொருளாகி உள்ளது. திருக்குறளில் அப்படி ஒரு குறளே கிடையாது என்பது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆம், இது 1330 திருக்குறள்களில் இல்லாததால், திருவள்ளுவருக்கு அவமரியாதை செய்யப்பட்டதாகவும், தவறான குறள் பயன்படுத்தப்பட்டதாகவும் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்ட பலர் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தனர்.

அதன்படி, இது குறித்து மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், “சிறந்த மருத்துவர்களுக்கு ஆளுநர் கொடுத்த விருதில், போலியான திருக்குறள் பொறிக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. காவி உடை திருவள்ளுவர் சித்திரம் போல், இல்லாத ஒரு குறளை பரப்புவது வள்ளுவரை அவமதிக்கும் மன்னிக்க முடியாத செயல். போலிச் சித்திரம், போலிக் குறள், இந்தப் போக்கு எங்கு கொண்டு செல்லும்?” என்று கூறியுள்ளார்.

சர்ச்சையை தொடர்ந்து, விருதுகள் அனைத்தையும் திரும்ப பெற திட்டமிட்டிருப்பதாகவும், திருக்குறள் திருத்தம் செய்யப்பட்டு மீண்டும் விருதுகள் வழங்கப்படும் எனவும் ஆளுநர் மாளிகை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், இது தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதோடு, இந்தச் சம்பவம் ஆளுநர் ஆர்.என்.ரவியின் முந்தைய சர்ச்சைகளுடன் இணைந்து, அவரது நடவடிக்கைகள் மீதான விமர்சனங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்