திருத்தம் செய்யப்பட்ட மதுபான கொள்கைக்கு உயர்நீதிமன்றம் தடை.! அரசு பதிலளிக்க உத்தரவு.!

சரவதேச விளையாட்டு போட்டிகள் மற்றும் சர்வதேச கருத்தரங்குகளில் மதுபான விநியோகம் செய்யும் அரசு அறிவிப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
திருமண நிகழ்வுகள், தனியார் நிகழ்வுகள், சர்வதேச போட்டிகள், சர்வதேச கருத்தரங்குகள் போன்ற நிகழ்வுகளில் அனுமதி பெற்று மதுபானங்கள் விநியோகம் செய்யலாம் என அண்மையில் அரசு அறிவித்து இருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அதில் திருத்தும் செய்து, சர்வதேச விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடங்கள் மற்றும் சர்வேத கருத்தரங்கில் மட்டும் மதுபானங்கள் விநியோகம் செய்ய அரசு அனுமதி என அறிவிப்பு வெளியானது.
இதில், அரசு முதலில் அறிவித்த திருமண நிகழ்வுகள், தனியார் நிகழ்வுகள், சர்வதேச போட்டிகள், சர்வதேச கருத்தரங்குகள் போன்ற நிகழ்வுகளில் அனுமதி பெற்று மதுபானங்கள் விநியோகம் செய்யலாம் என்ற அறிவிப்பு எதிராக பாமக கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதிகள் வைத்தியநாதன், கலைமதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், நீங்கள் தாக்கல் செய்த மனுவில் உள்ள கோரிக்கையை அரசு நீக்கி , திருத்தம் செய்து விட்டதால், புதிய அறிவிப்புக்கு எதிராக தான் வழக்கு தொடர முடியும் என கூறினர்.
இதற்கு பதில் கூறிய பாமக வழக்கறிஞர், நாங்கள் சர்வதேச கருத்தரங்கு, விளையாட்டு போட்டிகள் என அனைத்துக்கும் சேர்த்து தான் தடை கேட்கிறோம் எனவும், சர்வதேச விளையாட்டு போட்டிகளுக்கு குழந்தைகள் பெண்கள் என அனைவரும் வருவார்கள் ஆதலால், தமிழக அரசின் புதிய அறிவிப்பையும் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதனை தொடர்ந்து மதுபான விநியோகம் செய்யும் அரசின் புதிய திருத்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என கூறி, ஜூன் 14க்கு இந்த வழக்கை தள்ளிவைத்து உத்தரவிட்டது.