இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு 10% கூடுதல் விரி விதித்த அமரிக்க அதிபர் டிரம்ப்.!
அமெரிக்க அதிபர் டிரம்ப், BRICS நாடுகள் (இந்தியா உட்பட) அமெரிக்கக் கொள்கைகளை விமர்சித்தால், கூடுதல் 10% வரி விதிக்கப்போவதாக எச்சரித்துள்ளார்.

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1, 2025 முதல் 25 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
அதன்படி, ஜப்பான், தென்கொரியா, மியான்மர், லாவோஸ், தென்னாப்பிரிக்கா, கஜகஸ்தான், மலேசியா, துனிசியா, இந்தோனேசியா, போஸ்னியா, வங்கதேசம், செர்பியா, கம்போடியா மற்றும் தாய்லாந்து ஆகிய 14 நாடுகளுக்கு 25% என்கிற அதிக வரிகள் விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்தியா உட்பட அனைத்து BRICS நாடுகளுக்கும் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் வரியுடன் விரைவில் கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் இந்த வரி இதுவரை அமல்படுத்தப்படவில்லை.
அதாவது, பிரிக்ஸ் கூட்டமைப்பினர் அமெரிக்க டாலரை வலுவிழக்க முயற்சிகள் மேற்கொள்வதாகவும், ஆகையால் அமெரிக்காவின் வர்த்தக நலன்களை பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், விரைவில் இது அமலாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். ஆனால், இந்தியா உட்பட பிரிக்ஸ் நாடுகள் இதற்கு எவ்வாறு பதிலளிக்கும், அல்லது இந்த வரி எவ்வாறு அமல்படுத்தப்படும் என்பது இன்னும் தெளிவாகவில்லை.
இதனிடையே, இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான புதிய இறக்குமதி வரி விதிப்பு ஆக. 1-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், விலை உயர்வு, சந்தை பாதிப்பு அச்சம் தவிர்க்கப்பட்டுள்ளது. அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதலே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது கவனிக்கத்தக்கது.