பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து.., கேட் கீப்பர் சிறையில் அடைப்பு.!
பள்ளி வேன் ரயில்வே கேட்டை கடக்க முயலும் பொழுது கேட் போடாமல் இருந்ததது உட்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை விரைவு ரயில் (வண்டி எண்: 12654 ராக்ஷஸ் எக்ஸ்பிரஸ்) பள்ளி வேனுடன் மோதியது. இந்த விபத்தில் மூன்று மாணவர்கள் (வயது 10-12) உயிரிழந்தனர், மேலும் இரண்டு மாணவர்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்துக்கு கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவின் அலட்சியமே காரணம் எனக் கருதப்படுகிறது. ரயில்வே கேட் கீப்பர் பங்கஜ் சர்மா, ரயில் வருவதை அறிந்தும் கேட்டை மூடவில்லை என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. வேன் ஓட்டுநர் கேட்டைத் திறக்க வற்புறுத்தியதாகவும், அதற்கு இணங்கி கேட்டைத் திறந்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த நிலையில், சிதம்பரம் ரயில்வே காவல்துறையினர் வட மாநிலத்தை சேர்ந்த பங்கஜ் சர்மா மீது, 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ரயில்வே துறையும் அவரை பணியிடை நீக்கம் செய்து, விபத்துக்கு மன்னிப்பு கோரியுள்ளது. மேலும், உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.