சுதந்திர தின விழா: புதிய திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

நாட்டின் 77-ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி 10வது முறையாக தேசிய கோடி ஏற்றினார். இதனைத்தொடர்ந்து நாட்டின் உள்ள மாநில முதலமைச்சர்கள் அந்தந்த மாநிலங்களில் தேசிய கொடியை ஏற்றி வைத்தனர்.
அந்தவகையில், சென்னை கோட்டை கொத்தளத்தில் காவல்துறையின் சிறப்பு அணிவகுப்பு மரியாதையை ஏற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதன்பின் உரையாற்றிய முதலமைச்சர், ஒரு சில அறிவிப்புகள் மற்றும் புதிய திட்டங்களை அறிவித்தார்.
புதிய திட்டங்கள்:
- பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்திற்கு விடியல் பயணம் என பெயர் சூட்டப்படுகிறது.
- ஓலா, உபேர், ஸ்விகி, சொமேட்டோ உள்ளிட்ட ஊழியர்களுக்கு தனி நலவாரியம் அமைக்கப்படும்.
- பெண் ஆட்டோ ஓட்டுநர்கள், புதிய ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம் வழங்கும் திட்டத்தில், மேலும் 500 மகளிர் பயன்பெறும் வகையிலும், மூன்றாம் பாலினத்தவர்கள் பயன்பெறும் வகையிலும் விரிவுபடுத்தப்படும்.
- சென்னை கத்தீட்ரல் சாலையில் உள்ள செங்காந்தள் பூங்காவிற்கு அருகே உள்ள 6.9 ஏக்கர் நிலத்தில் ரூ.25 கோடி செலவில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்படும்.
- முதலமைச்சரின் காலை உணவு திட்டம் ஆக.25 முதல் மாநில முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படும். இந்த திட்டத்திற்காக இந்தாண்டு ரூ.404 கோடி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.
- மாநில பட்டியலில் கல்வி இணைக்கப்பட வேண்டும். கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றினால் தான் நீட் போன்ற கொடூர தேர்வை அகற்ற முடியும்.
அறிவிப்புகள்:
- விடுதலை போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.10,000-ல் இருந்து ரூ.11,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
- நடப்பாண்டு பல்வேறு துறைகளை சார்ந்த 55,000 பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது.
- ஏறத்தாழ ஒரு கோடி மகளிர் மாதம்தோறும் பயனடையும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அடுத்த மாதம் 15ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்தநாளன்று தொடங்கப்பட இருக்கிறது எனவும் தெரிவித்தார்.