கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு… மீண்டும் ஒத்திவைப்பு.!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை மீண்டும் ஜூன் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பான வழக்கு, உதகை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெறும் என ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
அப்போது விசாரணைக்காக வெளிமாநிலம் செல்வதாகக் கூறி சிபிசிஐடி இந்த வழக்கில் மேலும் அவகாசம் வேண்டும் என கோரியது. இதனை விசாரித்த நீதிபதி மீண்டும் இந்த வழக்கின் விசாரணையை வரும் ஜூன் 28க்கு ஒத்திவைத்துள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களாவில், நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கானது முதலில் போலீசார் விசாரணை நடத்திவந்த நிலையில், வழக்கு சிபிசிஐடி வசம் மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று விசாரணைக்கு வந்த வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.