மணிப்பூர் விவகாரம்: ஜூலை 26ல் காங்கிரஸ் போராட்டம் – கேஎஸ் அழகிரி அறிவிப்பு

மணிப்பூர் விவகாரத்தை கண்டித்து ஜூலை 26-ல் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி அறிவிப்பு.
இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின பெண்களை நிர்வாணமாக்கி பாலியல் பலாத்காரம் செய்த கயவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கத் தவறிய மணிப்பூர் மாநில அரசை டிஸ்மிஸ் செய்யக் கோரியும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறுதல் கூறவும் வருகிற ஜூலை 26 ஆம் தேதி மாலை 6 மணி முதல் 7 மணி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சியினரைக் கேட்டுக்கொள்கிறேன்.
துரியோதனன் சபையில் திரௌபதியை துச்சாதனன் துகிலுரித்து மானபங்கம் செய்தபோது நெட்டை மரங்களாக நின்று புலம்பியதை போல பிரதமர் மோடி புலம்பியிருக்கிறார். பிரச்சனைக்குத் தீர்வு காணாமல் எதிர்க்கட்சிகள் மீது பழி போடுகிறார். அன்றைக்குப் பாரதப் போரில் கௌரவர்களுக்கு என்ன கதி ஏற்பட்டதோ அதே கதிதான் பாஜகவுக்கும் விரைவில் ஏற்படப் போகிறது. மணிப்பூர் சகோதரிகளின் மானபங்கத்திற்கு பிரதமர் மோடி பொறுப்பேற்காமல் தப்ப முடியாது.
மணிப்பூரில் நடந்த அவமானத்திற்குப் பொறுப்பற்ற முறையில் பதில் கூறுகிற பிரதமர் மோடிக்கு உரிய பாடத்தைப் புகட்டுவதற்கு ஜூலை 26 ஆம் தேதி நடைபெறுகிற மெழுகுவர்த்தி ஊர்வலத்தில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று வெற்றிகரமாக நடத்திட வேண்டும்.
மணிப்பூர் மாநில பழங்குடியின சகோதரிகளுக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமையை எதிர்த்து நாடு முழுவதும் தன்னிச்சையான போராட்டங்கள் நடந்து வருகின்றன. மணிப்பூர் மாநிலத்தில் நிகழ்ந்த நிகழ்வுக்கும், சட்ட ஒழுங்கு சீர்குலைவுக்கும் காரணமான பிரேன் சிங் தலைமையிலான பாஜக அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்து குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும். இது தான் எதிர்க்கட்சிகளின் ஒரே கோரிக்கையாகும் எனவும் தெரிவித்துள்ளார்.