ADMK – BJP : விஷப்பாம்பு பாஜக… குப்பை புதர் அதிமுக.! குட்டி கதை கூறிய அமைச்சர் உதயநிதி.!

இன்று நெய்வேலியில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது தன் மீது ஏற்கனவே முன்வைக்கப்படும் சனாதான விமர்சனம் பற்றியும், அதன் எதிர்ப்பு பற்றியும் பேசினார்.
அப்போது பேசுகையில், சனாதானத்தைப் பற்றி நான் பேசியதை திரித்து பரப்பி, நான் ஏதோ இனப்படுகொலைக்கு அழைப்பு விடுத்தது போல பேசுகின்றனர் தமிழில் விமர்சனம் வைத்தார், மேலும், இது குறித்தும் பாஜக குறித்தும் அதிமுக குறித்தும் ஒரு குட்டி கதை ஒன்றையும் கூறினார்.
அதாவது வீட்டில் நாம் சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது, திடீரென விஷப்பாம்பு வந்தால் அதனை தடியை வைத்து அடித்து விரட்டி விடுவோம். மீண்டும் ஒரு இரண்டு நாள் கழித்து அந்த பாம்பும் நம் வீட்டிற்குள் வரும்.
அப்போதும் தடியை வைத்து அடித்து விரட்டி விடுவோம். எப்படி இந்த பாம்பு திரும்ப வருகிறது என பார்க்கும் போது தான் நம் வீட்டிற்கு வெளியில் ஒரு குப்பை புதர் இருக்கும். அந்த குப்பைக்குள் பாம்பு ஒளிந்து கொண்டு, பின்னர் வீட்டினுள் உள்ளே வரும். இந்த விஷப்பாம்பு பாஜக என்றால், பாஜக ஒளிந்திருக்கும் குப்பை புதர் தான் அதிமுக.
விஷப்பாம்பு பாஜகவை ஒழிக்க வேண்டும் என்றால், முதலில் குப்பையை அகற்ற வேண்டும் என்று பாஜக – அதிமுக கூட்டணி பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்து பேசினார்.
மேலும் நான் ஏதோ இனப்பட படுகொலைக்கு அறைகூவல் விடுத்தேன் என திரித்து பேசுகிறார்கள். ஆனால் உண்மையில் இனப்படுகொலை நடந்து கொண்டிருப்பது மணிப்பூரில். அங்கு கடந்த ஐந்து மாதங்களாக இனப்படுகொலை நடைபெற்று வருகிறது. அங்கு பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பத்திரிக்கையாளர்கள் உள்ளே அனுமதி கிடையாது. இன்டர்நெட் கிடையாது.
ஒரு பிரதமர் இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துதான் அவரை பாராளுமன்றத்திற்கு வர வைக்க வேண்டிய நிலைமை இங்கு உள்ளது. ஜி20 மாநாடு நேற்றும் இன்றும் டெல்லியில் நடைபெறுகிறது. அங்கு வரும் உலகத் தலைவர்கள் கண்ணில் வராதபடி அங்குள்ள குடிசைகளை ஒரு பெரிய திரை போட்டு மத்திய அரசு மறைத்து வருகிறது என்று விமர்சித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.