MKStalin: அயராது உழைத்திட்ட அனைவரையும் இத்தருணத்தில் பாராட்டி மகிழ்கிறேன்.. முதலமைச்சர்!

Tamilnadu CM MK Stalin

தமிழ்நாட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார்.முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 115-ஆவது பிறந்தநாளான நேற்று மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. அதன்படி, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் 1.06 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை நேற்று முதல் வழங்கப்படுகிறது.

தகுதியான சில பயனாளிகளுக்கு முன்கூட்டியே நேற்று முன்தினம் முதல் ரூ.1000 உரிமைத்தொகை அவர்களது வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று திட்டம் முழுமையாக தொடங்கப்பட்டது. இந்த மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்கி வைத்து, 13 பேருக்கு கூட்டுறவு வங்கி ஏடிஎம் அட்டைகளை முதலமைச்சர் வழங்கினார். மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், 1.06 விண்ணப்பங்கள் தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்தை செயல்படுத்த தகுதியானவர்களை தேர்வு செய்ய இரண்டு கட்டங்களாக முகாம்கள், சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மேலும் அரசு அதிகாரிகள் உள்பட பலர் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மாதந்தோறும் இந்த உரிமை தொகையானது 15-ஆம் தேதி குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக உழைத்த அதிகாரிகளை பாராட்டி மகிழ்கிறேன் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மிகக் குறுகிய காலத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகளைக் கண்டறிவதற்கு அயராது உழைத்திட்ட அனைவரையும் இத்தருணத்தில் பாராட்டி மகிழ்கிறேன்.

இத்திட்டத்தில் களப்பணியாற்றிய கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் தன்னார்வலர்கள், சுய உதவிக் குழு உறுப்பினர்கள், நியாய விலைக் கடைப் பணியாளர்கள், நகராட்சி – மாநகராட்சிப் பணியாளர்கள், அனைத்து அரசுத் துறை அலுவலர்களையும் இத்திட்ட நிகழ்வின் வெற்றியில் பாராட்டி மகிழ்கிறேன். மேலும், களப்பணியாளர்களை வழிநடத்திய மாவட்ட ஆட்சியர்கள், அரசு செயலாளர்கள், தலைமைச் செயலாளர்கள் வரை உள்ள அனைத்து உயர் அலுவலர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்