Nipah – Covid 19 : கொரோனாவை விட 'நிபா' வைரஸ் ஆபத்தானது.! இந்திய ஆராய்ச்சி கழகம் எச்சரிக்கை.!

கேரளாவில் தற்போது நிபா வைரஸின் தாக்கம் சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதன் காரணமாக கேரள மாநிலம் முழுவதும் சுகாதாரத் துறை பாதுகாப்பு ஏற்பாடுகள்

Nipah Virus - Covid 19 Virus

கேரளாவில் தற்போது நிபா வைரஸின் தாக்கம் சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதன் காரணமாக கேரள மாநிலம் முழுவதும் சுகாதாரத் துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தை ஒட்டி உள்ள கேரள எல்லைகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்திலும் தீவிர காய்ச்சல் காரணமாக சில உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. இதனால் தமிழகத்திலும் தற்போது சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐஎம்சிஆர்) இயக்குனர் ராஜீவ் பாஹ்ல் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில்,  கொரோனா வைரஸை விட நிபா வைரஸ் ஆபத்தானது என குறிப்பிட்டு உள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டோர் உயிரிழப்பு வீதம் 2 முதல் 3 சதவீதம் மட்டுமே. ஆனால், நிபா வைரசால் பாதிக்கப்பட்டோர் இறக்கும் வீதமானது தற்போது 40 முதல் 70 சதவீதம் வரை உள்ளது என்ற அதிர்ச்சி தகவலை கூறினார்.

மேலும், தற்போது அதனை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும், தற்போது எப்படி திடீரென அதிக நோய் தொற்றுகள் பரவி வருகின்றன என்பது பற்றி முழுதான தகவல்கள் தங்களுக்கு கிடைக்கப்பெறவில்லை என்றும் இந்த வைரஸானது, கடந்த 2012 ஆம் ஆண்டில் கேரளாவில் வவ்வால்களுடம் இருந்து பரவியது என்றும் குறிப்பிட்டார்.

வவ்வால்களிடமிருந்து எப்படி மனிதர்களுக்கு பரவியது என்பது பற்றிய தகவல்கள் இன்னும் தெரியவில்லை என்றும், இந்த வைரஸ் ஆனது மழைக்காலத்தில் அதிகமாக பரவ கூடும் என்றும் ஐஎம்சிஆர்) இயக்குனர் ராஜீவ் பாஹ்ல்தெரிவித்தார்.

இந்த நிபா வைரசை கட்டுப்பாட்டில் கொண்டு வர, ஆஸ்திரேலியாவில் இருந்து மருந்துகளை இந்தியா வாங்க உள்ளது என்றும், தற்போது மருந்துகள் வாங்கப்பட்டாலும் அதனை வைரஸ் தாக்கத்தின் ஆரம்ப கட்டத்திலேயே நோயாளிகளுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கேரளாவில் இதுவரை ஆறு பேருக்கு நிபா வைரஸ் தொற்று ஏற்பட்டு, அதில் இரண்டு பேர் இறந்துள்ளனர் இதை கருத்தில் கொண்டு கோழிக்கூடு மாவட்டத்தில் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும், பூங்கா, கடற்கரை போன்றுவற்றையும் அரசு மூடியுள்ளது. பொது நிகழ்ச்சிகளுக்கும் அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.