”கீழடி ஆய்வறிக்கையில் திருத்தம் தேவையில்லை” – தொல்லியல் ஆய்வாளர்.!
தமிழ்நாட்டின் நகர நாகரீகம் இருந்த காலத்தின் உண்மைத்தன்மையை உறுதி செய்யுமாறு, கீழடி ஆய்வறிக்கை நேற்று திருப்பி அனுப்பப்பட்டது.

சென்னை : கீழடி, தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமாகும். இங்கு 2014-15 முதல் மத்திய தொல்லியல் துறையின் கீழ், அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில், முதல் இரண்டு கட்ட அகழாய்வுகள் நடைபெற்றன. இந்த ஆய்வுகள், வைகை நதிக்கரையில் அமைந்த கீழடி ஒரு தொன்மையான நகர்ப்புற நாகரிகமாக இருந்ததை உறுதிப்படுத்தின.
இந்த நிலையில், அமர்நாத் ராமகிருஷ்ணன் கடந்த 2023 ஜனவரியில் முதல் இரண்டு கட்ட ஆய்வுகளின் 982 பக்க அறிக்கையை மத்திய தொல்லியல் துறைக்கு சமர்ப்பித்தார். ஆனால், இந்த அறிக்கையை மத்திய தொல்லியல் துறை இதுவரை வெளியிடவில்லை.
கடந்த 2 ஆண்டுகளாக கீழடி ஆய்வறிக்கையை வெளியிடாமல் கிடப்பில் போட்டுள்ள மத்திய அரசு, இப்பொது அறிக்கையில் “திருத்தம் தேவை” எனக் கூறி, ஆய்வறிக்கையை திருத்தி சமர்ப்பிக்க ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனிடம் கோரியுள்ளது.
இது குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், “தமிழ்நாட்டின் தொன்மைக்கும், கீழடியின் உண்மைக்கும் பாஜக எதிரி” என விமர்சித்திருந்தார். மேலும், இது உள்நோக்கம் கொண்டது என்று சிந்துவெளி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தொன்மை அறிவியல் முறைப்படி ஆய்வு செய்யப்பட்டு கி.மு.800 -கி.மு 500 என உறுதி செய்யப்பட்ட அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. எனவே, ‘ஏற்கனவே அளிக்கப்பட்ட அறிக்கையில் மாற்றம் தேவையில்லை, கீழடி ஆய்வறிக்கை சரியாகவே இருக்கிறது’ என்று மத்திய தொல்லியல்துறைக்கு, அமர்நாத் ராமகிருஷ்ணன் பதிலளித்துள்ளார்.
கீழடியில் 2014-16ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மத்திய அரசிடம் சமர்ப்பித்திருந்த அறிக்கையில் திருத்தம் செய்யுமாறு திருப்பி அனுப்பப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் நகர நாகரீகம் இருந்த காலத்தின் உண்மைத்தன்மையை உறுதி செய்யுமாறு தொல்லியல் துறை இயக்குநர் ஹேமாசாகர் நாயக் கூறியிருந்தார்.
தொன்மை அறிவியல் முறைப்படி ஆய்வு செய்யப்பட்டு கி.மு. 800 – கி.மு. 500 என உறுதி செய்யப்பட்டே அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. எனவே திருத்தம் செய்ய தேவையில்லை” என்று கூறியுள்ளார்.