CauveryIssue : அக்டோபர் 12ஆம் தேதி கூடும் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்.!

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலம் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்திற்கு உச்சநீதிமன்ற உத்தரவின்படி தேவையான அளவு தண்ணீர் வழங்க வேண்டும் என தமிழக அரசும், தங்களிடம் போதிய அளவு தண்ணீர் இல்லை என கர்நாடக அரசும் தொடர்ந்து முறையிட்டு வருகின்றனர். இந்த விவகாரமானது காவிரி ஒழுங்காற்று மையம், காவிரி மேலாண்மை வாரியம் ஆகிய அமைப்புகளிடத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று மையம் தமிழத்திற்கு வினாடிக்கு 3000 கனஅடி நீர் வீதம் அடுத்த 15 நாட்கள் திறந்து விட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது. அதே நேரத்தில் காவிரி விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையிலும் காவிரி ஒழுங்காற்று மைய உத்தரவை செயல்படுத்த கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து கர்நாடகாவில் போராட்டங்கள் நடைபெற்றன. அதே போல தண்ணீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசுக்கு எதிராகவும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட முடியாது. தங்களிடம் போதிய அளவு தண்ணீர் இல்லை என காவிரி மேலாண்மை வாரியத்தில் கர்நாடக அரசு முறையிட்டது.
இதனை தொடர்ந்து தான், 88வது காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் வரும் அக்டோபர் 12ஆம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அக்குழுவின் தலைவர் வினீத் குப்தா இரு மாநில அரசுகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். ஏற்கனவே நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் , குருவை சாகுபடிக்காக வினாடிக்கு 12,500 கனஅடி நீர் திறக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்து இருந்தது குறிப்பிடதக்கது.