கோடநாடு தொடர் கொலை.. மின்சாரத்தை யார் துண்டித்தார்கள்.? ஆர்ப்பாட்டத்தில் ஓபிஎஸ் சரமாரி கேள்வி.!

கோடநாடு கொலை – கொள்ளை வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி தேனியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அமமுக கட்சி தலைவர் டிடிவி.தினகரன் கலந்து கொண்டார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், கோடநாடு கொலை – கொள்ளை வழக்கு குறித்து அரசு துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கோடநாடு கொள்ளை – கொலை நடத்திய கூட்டத்திற்கு உரிய தண்டனை பெற்று தரவேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் பேசுகையில், 24.04.2017 அன்று கோடநாடு பங்களாவில் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டு, இன்னொரு காவலாளியாக கிருஷ்ண பகதூர் தாக்கியுள்ளது ஒரு கும்பல், கனகராஜ் எனும் டிரைவரையும் அந்த கும்பல் கொலை செய்துவிட்டு , இந்த சமபவங்களில் குற்றவாளி என கூறப்பட்ட சையான் என்பவரை குடும்பத்தோடு லாரியை வைத்து மோதி படுகொலை செய்து, கம்பியூட்டர் ஆபரேட்டரை கொலை செய்துள்ளது ஒரு கும்பல்.
இந்த குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை பெற்று தரவேண்டும். என கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஆட்சிக்கு வந்த 3 மாதத்தில் கோடநாடு கொள்ளையையும், அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற கொலையையும் கண்டுபிடிப்பேன் என கூறி தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தார்.
ஆனால், இந்த வழக்கு இன்னும் ஆமை வேகத்தில் தான் நடைபெற்று வருகிறது. 30 மாதங்கள் ஆகியும் இந்த வழக்கை இன்னும் முடிக்கவில்லை. இந்த வழக்கு தற்போது அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. அங்கு நடைபெற்ற கொள்ளை கூட்டத்தை கண்டறிய வேண்டும்.
மேலும், எப்போதும் கோடநாடு பகுதியில் மின்சாரம் தடையில்லாமல் வழங்கப்படும். ஆனால் கொள்ளை, கொலை சம்பவம் நடைபெற்ற சமயத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதனை யார் செய்தது. கொலை செய்தவர்கள் யார் என வெளிகாட்ட வேண்டும். அதற்காக தான் இந்த ஆர்ப்பாட்டம் என ஓபிஎஸ் பேசினார்.
இந்த நிலை தொடர்ந்தால் இது மக்கள் போராட்டமாக மாறும். தீர்வுகாண்பதற்கு தாமதமானால் அதிமுகவும் – அமமுக இணைந்து போராட்டம் நடத்தும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆர்ப்பாட்டத்தில் பேசினார்.