இந்த விடியா அரசு பொறுப்பேற்றதில் இருந்து சாமான்ய மக்கள் தாக்குதலுக்கு ஆளாகின்றனர் – ஈபிஎஸ்

Default Image

முனைவர் பொள்ளாச்சி V. ஜெயராமன் அவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய திமுக-வினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சொந்த தொகுதியில் மக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்ற முனைவர் பொள்ளாச்சி V. ஜெயராமன் அவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய திமுக-வினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ‘கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கிணத்துக்கடவு தாலுக்கா, கோதவாடி பஞ்சாயத்தில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் உள்ள கோதவாடி குளம் 50 ஆண்டுகளாக புதர் மண்டி, குளம் இருக்கும் இடமே தெரியாமல் இருந்தது. தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில், முனைவர் பொள்ளாச்சி ஜெயராமன் அவர்களுடைய முயற்சியின் காரணமாக, அம்மாவின் அரசில், 2017-2018-ம் ஆண்டு குடிமராமத்துத் திட்டத்தின் கீழ், கோதவாடி குளம் தூர் வாருவதற்கு 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கிராம மக்களின் பங்களிப்புடன் குளம் மற்றும் வரத்துக் கால்வாய் ஆகியவை தூர் வாரப்பட்டன.

இதனால் ஆண்டுதோறும், மழை நீர் வரத்துக் கால்வாய் மூலம் குளத்தை வந்தடைந்தது. கடந்த வாரம் பெய்த தொடர் மழையின் காரணமாக, கோதவாடி குளம் நேற்று (20.12.2021) இரவு நிரம்பி, அக்கிராம மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது.

தொகுதி சட்டமன்ற உறுப்பினரின் முயற்சியின் காரணமாக, கோதவாடி குளம் மற்றும் வரத்துக் கால்வாய் தூர் வாரியதை நினைவு கூர்ந்த அக்கிராம மக்கள். சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, நேற்று (20.12.2021) இரவு அக்குளம் நிரம்பியதைத் தொடர்ந்து, வருண பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக, குளத்தின் கரையில் உள்ள அம்மன் கோயிலில் 101 பெண்கள் பொங்கல் வைத்து சாமி கும்பிட உள்ளதாகவும், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு முனைவர் பொள்ளாச்சி ஜெயராமன் அவர்களை அன்புடன் அழைத்துள்ளனர்.

முனைவர் பொள்ளாச்சி ஜெயராமன் அவர்களும், மக்களின் அழைப்பை ஏற்று வருண பகவானுக்கு நன்றி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இன்று காலை 11 மணிக்கு கோதவாடி கிராமத்திற்குச் சென்றுள்ளார். இதை பொறுத்துக்கொள்ள முடியாத தீயசக்தி திமுக-வின், அப்பகுதியைச் சேர்ந்த ஒன்றியச் செயலாளர், முனைவர் பொள்ளாச்சி ஜெயராமன் அவர்களை முன்னிருத்தி பொங்கல் வைக்கக்கூடாது என்று கிராம மக்களை மிரட்டியுள்ளார். இந்த மிரட்டலுக்கு பயப்படாத அக்கிராம மக்கள் வருண பகவானுக்கும், குளத்துக்கரை அம்மனுக்கும் பொங்கல் வைத்து நிகழ்ச்சியினை சீரும் சிறப்புமாக கொண்டாடி வந்தனர்.

இந்நிகழ்ச்சியில் முனைவர் பொள்ளாச்சி ஜெயராமன் அவர்களும் பங்கேற்று சிறப்பித்துக் தி.மு.க. ஒன்றியச் செயலாளர் மற்றும் கொண்டிருக்கும் வேளையில், 40 அடியாட்களுடன் வந்து முனைவர் பொள்ளாச்சி ஜெயராமன் அவர்கள் மீதும், அங்கிருந்த பொதுமக்கள் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்தியதோடு, பொங்கல் வைத்து வழிபட்ட பெண்களை ஆபாசமாகப் பேசி தாக்குதலில் ஈடுபட்டனர். இச்செயலை அங்கிருந்த காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான காவல் துறையினர் வேடிக்கை பார்த்ததோடு, அங்கு போடப்பட்டிருந்த சாமியானா பந்தல் மற்றும் சேர்களை பறிமுதல் செய்துள்ளனர்.

பொள்ளாச்சி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சரும், முன்னாள் துணை சபாநாயகரும், கழக தேர்தல் பிரிவுச் செயலாளரும், மண்ணின் மைந்தருமான முனைவர் பொள்ளாச்சி ஜெயராமன் அவர்கள் பட்டப் பகலில், காவல் துறையினரின் முன்னிலையிலேயே தி.மு.க. குண்டர்களால் தாக்கப்படுகிறார் என்றால், சாதாரண, சாமான்ய மக்களின் நிலை என்ன என்பதை எண்ணிப் பார்க்கவே முடியவில்லை.

இந்த விடியா அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்தே, திமுக-வினரால் சாமான்ய மக்கள், அதிகாரிகள் தொடர்ந்து தாக்குதலுக்குட்பட்டு வருகின்றனர். கொலை, கொள்ளை, பாலியல் வக்கிரங்கள் நாள்தோறும் நடந்த வண்ணம் உள்ளது. மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவலர்களே இடங்களில் ஆளும் பல திமுக-வினரால் தாக்குதலுக்குள்ளாகி வருகின்றனர்.

அதே நேரத்தில், திமுக-வினருக்கு ஏவல் செய்யும் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் முக்கியமான இடங்களில் பணியமர்த்தப்படுகின்றனர். அவர்களை முன்வைத்து தமிழகமெங்கும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று சட்டமன்ற உறுப்பினரே, அவரது தொகுதியிலேயே தாக்குதலுக்கு ஆளாகி உள்ளார்.

இந்த ஆளும் கட்சியினரின் வன்முறையை கடுமையாக கண்டிக்கிறேன். இதுபோன்ற சட்டவிரோத செயல்களைத் தடுத்து நிறுத்த, சட்ட ரீதியான நடவடிக்கைகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறேன். முனைவர் பொள்ளாச்சி ஜெயராமன் அவர்கள் மீதும், பொதுமக்கள் மற்றும் மகளிர் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விடியா அரசின் காவல் துறையை தன்வசம் வைத்திருக்கும் திரு. ஸ்டாலின் அவர்கள் தவறு செய்த திமுக-வினர் மீதும், இதை வேடிக்கைப் பார்த்த காவல் துணை கண்காணிப்பாளர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்