மயிலாடுதுறை இரட்டை கொலை! காரணம் அதுவல்ல.., காவல்துறை விளக்கம்!
மயிலாதுறையில் நடைபெற்ற இரட்டை கொலை சம்பவம் சாராய விற்பனை தொடர்பாக நடைபெறவில்லை எனவும் முன்விரோதம் காரணமாக நடைபெற்றது என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

மயிலாடுதுறை : சாராய வியாபாரத்தை தட்டிக்கேட்டதற்காக கல்லூரி மாணவர் உட்பட 2 பேரை ஒரு கும்பல் கொலை செய்ததாக கூறப்படும் செய்தி மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் மீதம் உள்ள குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என ஊர்மக்கள் போராட்டம் நடத்தி வருவதால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் அருகே முட்டம் எனும் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் சாராய விற்பனை செய்து வந்ததாகவும், இதனை ஹரிசக்தி மற்றும் ஹரிஷ் ஆகிய இளைஞர்கள் தட்டி கேட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் நேற்று (பிப்ரவரி 14) இரவு இந்த இரட்டை கொலை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை அடுத்து வழக்குப்பதிவு செய்த மயிலாடுதுறை காவல்துறையினர் முட்டம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (சாராய விற்பனை வழக்கில் கைது செய்ப்பட்டு பிணையில் வெளியே வந்தவர்), மூவேந்தன், தங்க துரை ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர். இந்த இரட்டை கொலை சம்பவத்தில் மேலும் சில நபர்கள் தொடர்பில் இருக்கிறார்கள் அவர்களையும் கைது செய்ய வேண்டும் என உயிரிழந்த 2 இளைஞர்களின் உடல்களை வாங்க மறுத்து கும்பகோணம் – மயிலாடுதுறை சாலையில் ஊர்மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், மயிலாடுதுறை இரட்டை கொலை சம்பவ பின்னணியில் சாராய விற்பனை காரணமில்லை. இந்த கொலைகள் முன்விரோதம் காரணமாகவே நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக யாரும் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்ப வேண்டாம் என் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
முட்டம் பகுதியை சேர்ந்த கைது செய்யப்பட்ட ராஜ்குமார், மூவேந்தன், தங்கதுரை ஆகிய 3 பேரின் வீடுகளையும் ஊர்மக்கள் அடித்து நொறுக்கியுள்ளனர், மேலும் அங்கிருந்த வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் அங்கு பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.