இன்று முதல் மாணவர்ளுக்கு காலாண்டு விடுமுறை! பள்ளிக்கு எப்போது வர வேண்டும்?

தமிழ்நாட்டில் காலாண்டு தேர்வு நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், இன்று முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 6 முதல் 10 வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு செப்டம்பர் 19ம் தேதி தொடங்கிய பொது வினாத்தாள் முறையில் காலாண்டுத் தோ்வு (செப் 27ம் தேதி) நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்த நிலையில், 2023-24ஆம் கல்வியாண்டில் காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் அக்டோபர் 3-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆனால், விடுமுறை அளிக்கப்பட்டுள்ள இந்த தேதிக்குள் அரசு விடுமுறைகளும் வருவதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிருப்தி அடைந்தனர். இதனையடுத்து இந்த விடுமுறையை நீட்டிக்குமாறும் கோரிக்கைகள் எழுந்தது.
அதற்கு ஏற்றார் போல், தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, காலாண்டு விடுமுறை 1 முதல் 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 10 நாட்கள் விடுமுறையும், 4 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 5 நாட்கள் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 1 – 5 வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 8 ம் தேதி வரையும் 6 – 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 28 முதல் ஆரம்பித்து அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி வரை என காலாண்டு விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ன.
காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பின், 1 – 5 வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 9 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் 6 – 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 3-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, தமிழகத்தில் இந்த ஆண்டு அதிகப்படியான வெயில் தாக்கம் காரணமாக பள்ளிகள் 10 நாட்கள் கூடுதலாக விடுமுறை அளிக்கப்பட்டு தாமதமாக திறக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் சனிக்கிழமையிலும் பள்ளிகள் நடைபெறும் சூழ்நிலை உருவானது. இதன்காரணமாக கடந்த ஆண்டு 9 நாட்கள் வரை காலாண்டு விடுமுறை விடப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 5 நாள்கள் மட்டுமே விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.