”ரயில்வே கிராஸிங்கில் சிசிடிவி கட்டாயம்” – வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது ரயில்வே துறை.!
ரயில்வே கேட்டுகளில் பொதுமக்கள் அழுத்தத்தால் மோதல் ஏற்படும் இடங்களுக்கு ரயில்வே போலீசார் மூலம் பாதுகாப்பு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தது தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மா குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அவர் வேலை நேரத்தில் பலமுறை தூங்கியதும், பலமுறை விபத்து தவிர்க்கப்பட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து: ரயில்வே கேட்களில் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. ரயில்வே கேட்டுகளில் பொதுமக்கள் அழுத்தத்தால் மோதல் ஏற்படும் இடங்களுக்கு ரயில்வே போலீசார் மூலம் பாதுகாப்பு வழங்க வேண்டும் என ரயில்வே கேட்களில் 11 முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் அறிவுறுத்தியுள்ளார்.
இவ்வாறு, ரயில்வே கேட் மேலாண்மை குறித்து நேற்றைய தினம் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, ”அனைத்து ரயில்வே கேட், கேட் கீப்பர் அறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும். 10,000 வாகனங்களுக்கு மேல் கடந்து செல்லும் ரயில்வே கேட்களில் தானியங்கி இண்டர்லாக் அமைப்பு பொருத்த வேண்டும்.
இண்டர்லாக்கிங் இல்லாத கேட்களில் கேட் கீப்பர், ஸ்டேசன் மாஸ்டரின் குரல் பதிவுகளை கண்காணிக்கவும். கேட் கீப்பர்கள், ஸ்டேஷன் மாஸ்டர்களின் அழைப்புகளை பதிவு செய்ய வேண்டும். ரயில்வே கேட் அருகில் வேகத்தடைகள், எச்சரிக்கை| பலகைகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். லெவல் கிராசிங்கில் இண்டர்லாக்கிங் பணிகளை விரைந்து முடிக்கவும். அனைத்து ரயில்வே கேட்களையும் 15 நாட்களில் ஆய்வு செய்ய வேண்டும்” என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.