களம் காத்திருக்கிறது.. சாதனை படைத்திடுங்கள்.. முதலமைச்சர் கோப்பை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி டிவீட்..!

நேற்று முதலமைச்சர் கோப்பை ஜோதி ஏற்றப்பட்டதை குறிப்பிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
முதலமைச்சர் கோப்பைக்கான பள்ளி, கல்லூரி, பொது பிரிவு, அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கென மாவட்ட, மண்டல அளவிலான கபடி, சிலம்பம் உட்பட 15 விளையாட்டு போட்டிகள் இன்று முதல் துவங்க உள்ளன. இந்த முதலமைச்சர் கோப்பைக்கான ஜோதியினை விளையாட்டு வீரர்களின் அணிவகுப்புடன் நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் ஏற்றி போட்டிகள் துவங்கி வைக்கப்பட்டது.
முதலமைச்சர் கோப்பையை அறிமுகப்படுத்தும் நேற்றைய விழாவில் கலந்துகொண்டு கோப்பையை அறிமுகப்படுத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், 38 மாவட்ட வீரர் வீராங்கனைகளின் அணிவகுப்புடன் தொடங்கிய இந்த வண்ணமயமான நிகழ்வில் மாநில அளவிலான போட்டிக்கான ஜோதியை ஏற்று வைத்து முதலமைச்சர் கோப்பை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.
மேலும், மாநில அளவிலான போட்டிகளை வென்று தேசிய, சர்வதேச அளவில் ஆட்ட நாயகர்களாக உருவெடுக்க வாழ்த்துக்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.
இதனை குறிப்பிட்டு, பதில் அளிக்கும் விதமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், களம் காத்திருக்கிறது.. சாதனைகள் பல புரிந்திடுங்கள். என தமிழ்நாட்டு வீரர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு, நீங்கள் எல்லைகள் கடந்து சாதனைகள் புரிவதை காண ஆவலோடு காத்திருக்கிறேன் எனவும் அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டு உள்ளார்.
களம் காத்திருக்கிறது. சாதனைகள் பல படைத்திடுங்கள் தமிழ்நாட்டு வீரர்களே!
உங்களை வாழ்த்த – வெற்றிக் கோப்பைகளைத் தந்து, நீங்கள் எல்லைகள் கடந்து சாதனைச் சிகரங்களைத் தொடுவதைக் காண ஆவலாய் இருக்கிறேன்!#TheChiefMinistersTrophy2023 #களம்_நமதே! https://t.co/6EvFC9sFmT
— M.K.Stalin (@mkstalin) June 30, 2023