ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை… அதிர்ச்சி வாக்குமூலம்!
வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூர்: திருப்பூரில் இருந்து ஆந்திராவுக்கு ரயிலில் சென்ற 4 மாத கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து ரயிலில் இருந்து தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்த பெண்ணை, ஜோலார்பேட்டை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் ரேவதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றிய வேலூர் கே.வி.குப்பத்தை சேர்ந்த ஹேமராஜ் என்பவரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். கைதான ஹேமராஜ் மீது செல்போன் பறிப்பு, கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என காவல் துரை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் இருந்து திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி ரயிலில், கதவு அருகே கம்பியை கையில் பிடித்து கொண்டு 30 நிமிடங்கள் போராடியதாக ஓடும் ரயிலில் பாலியல் தொல்லைக்கு ஆளான கர்ப்பிணி பெண், அந்த கொடூர சம்பவத்தை விளக்கியுள்ளார்.
பெண்களுக்கான பெட்டியில் வேறு பயணிகள் இல்லாததை அறிந்த ஹேமராஜ், தன்னிடம் அத்துமீறியதாகவும், கூச்சலிட்டு போராடியதால் தனது கையை உடைத்து கீழே தள்ளிவிட்டதாகவும் கூறியுள்ளார். இது குறித்து விரிவாக பேசிய அந்த பெண், “மகளிர் பெட்டியில் யாரும் இல்லை என்பதை அறிந்து என்னிடம் தவறாக நடந்து கொண்டான்.
தலை முடியை பிடித்து இழுத்துச் சென்று, கையை உடைத்தான். ஒரு கையால், ரயிலில் இருந்து கீழே விழுந்துவிடாமல் இருக்க போராடினேன். பிறகு, உதைத்து என்னை கீழே தள்ளிவிட்டான், அதன் பிறகு என்ன ஆனது எனத் தெரியாது. ரயில் பெட்டியில் சுமார் அரை மணி நேரம் அவனோடு போராடினேன்.
அவனுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். எந்த பெண்ணுக்கும் இதுபோல் நடக்கக்கூடாது. கர்ப்பிணினு சொல்லியும் கேக்கல, எனக்கு நடந்தது வேற யாருக்கும் நடக்கக்கூடாது. இந்த சைக்கோவெல்லாம் வெளில விடாதீங்க, அவனுக்கு முடிஞ்சவரை தண்டனை வாங்கிக்கொடுங்க” என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.