மாணவர்களே ஜூன் 2 பள்ளிகள் திறப்பு! முன்னேற்பாடு செய்ய உத்தரவிட்ட பள்ளிக்கல்வித்துறை!
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2 பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், முன்னேற்பாடு செய்ய இயக்குனர் உத்தரவிட்டுள்ளது.

சென்னை : தமிழ்நாட்டில் 2025-2026 கல்வியாண்டிற்காக அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஏற்கனவே, முன்னதாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி செல்லுமா என கேள்விகள் எழுந்தது. அதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் நிலவரத்தை பொறுத்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இப்போது பள்ளிகள் திறக்கும் தேதி நெருங்கி வரும் காரணத்தால் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி செல்கிறதா என்கிற கேள்விகள் அதிகமாக எழுந்த நிலையில், ஜூன் 2 அன்று 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று தொடக்கக் கல்வி இயக்குநர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பதற்கு முன்னர், மாணவர்களின் கல்வி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு தொடக்கக் கல்வி இயக்குநர் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தலையும் வழங்கியுள்ளார். அதன்படி, பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள், மற்றும் மாணவர்கள் பயன்படுத்தும் இடங்கள் சுத்தமாகவும், தயார் நிலையிலும் இருக்க வேண்டும். கழிவறைகள், குடிநீர் வசதிகள் மற்றும் பிற உட்கட்டமைப்புகளை சரிபார்த்து, சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதைப்போல, பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், மற்றும் பிற கற்றல் உபகரணங்கள் (வண்ணப் பென்சில்கள், கணித உபகரணப் பெட்டிகள், புவியியல் வரைபடங்கள்) வழங்கப்பட வேண்டும்.மாணவர்களின் செயல்பாடுகள், பள்ளியின் திட்டங்கள், மற்றும் முக்கிய அறிவிப்புகளை பெற்றோர்களுக்கு தெரிவிக்க, வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.