தமிழ்நாடு என்பது வெறும் சொல் அல்ல.., அது தமிழரின் உயிர்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு.!

Tamilnadu CM MK Stalin

தமிழ்நாடு என்பது வெறும் சொல் அல்ல. அது தமிழரின் உயிர் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். 

பல்வேறு போராட்டங்கள், உயிர் தியாகம், எதிர்க்கட்சியாக இருந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தோல்விகள் என பல் தடைகள் கடந்து திமுக சார்பில் அறிஞர் அண்ணா முதல்வராக பொறுப்பேற்ற உடன் முதல் வேலையாக மெட்ராஸ் மாகாணத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்தார். அதன் பிறகு 1967, ஜூலை 18இல் மெட்ராஸ் மாகணமானது தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ய ஆளும் கட்சியான திமுக தீர்மானம் நிறைவேற்றி அதில் வெற்றிகண்டது. அன்று முதல் தற்போது வரையில் தமிழ்நாடு பெயர் உலகெங்கும் ஒலிக்கப்பட்டு வருகிறது.

இந்த தமிழ்நாடு பெயர் வைத்த நாளை நினைவு கூறி கொண்டாடும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து பதிவிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு எனும் சொல் வெறும் சொல் அல்ல. தமிழரின் உயிர். பரந்து விரிந்த நமது இந்தியத் துணைக்கண்டத்துக்கு அழகு சேர்ப்பது, இங்குள்ள பன்முகத்தன்மையே.1956 நவம்பர் 1 அன்று மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து பிரிந்து சென்று புதிய மாநிலங்கள் தோன்றின.

ஆனால், நம் தாய் நிலத்துக்குத் தமிழ்நாடு என்ற பெயர் பெற இன்னும் பதினொரு ஆண்டுகள் காக்க வேண்டியதாயிற்று. 1967-இல் இந்தியாவிலேயே முதன்முதலாக ஒரு மாநிலக் கட்சியான திமுக ஆட்சியைப் பிடித்தது. தமிழ்நிலத்தின் பெருமகன் – தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா முதலமைச்சரானார்.

1967 ஜூலை 18-இல் ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டினோம். மறைமலை அடிகள், தந்தை பெரியார், சோமசுந்தர பாரதியார், சங்கரலிங்கனார், சிலம்புச் செல்வர் ம.பொ.சி என இந்தப் போராட்டத்தின் வேர் மிக ஆழமானது. இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தமிழ்நாடு நாளில் தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக்கிடப் பாடுபட உறுதியேற்போம். தனித்துவமிக்க தமிழ்நாட்டின் ஒளி இந்தியா முழுதும் பரவட்டும். தமிழ்நாடு வாழ்க. என அந்த பதிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். மேலும் ஒரு விடீயோவையும் அதனுடன் இணைத்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்