தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் திருத்தச் சட்டம் அரசிதழில் வெளியீடு..!

இந்த ஆண்டிற்கான தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் திருத்தச் சட்டம் அரசிதழில் வெளியாகியுள்ளது.
தொழிலாளர்களின் நலனைக் கருத்தில்கொண்டும், குடிநீர், கழிப்பிடம் மற்றும் சிறுநீர் கழிப்பிடம் மற்றும் முதலுதவி வசதிகள் தொடர்புடைய மசோதா ஏப்ரல் 13ம் தேதி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. தற்பொழுது, ஆளுநரின் ஒப்புதலைப் பெறபட்ட நிலையில், இந்த சட்டத்திருத்தம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, கடை அல்லது நிறுவனத்தின் உரிமையாளர்கள் பணிபுரியும் அனைத்து நபர்களுக்கும், வசதியாக அமைந்துள்ள பொருத்தமான இடங்களில், போதிய அளவு சுகாதாரமான குடிநீரை வழங்குவதற்கும் பராமரிப்பதற்கும் பயனுள்ள ஏற்பாட்டினைச் செய்தல் வேண்டும்.
மேலும், போதிய எண்ணிக்கையில் கழிப்பிடம் மற்றும் சிறுநீர்க்கழிப்பிடங்களை ஏற்பாடு செய்து தருதல் வேண்டும், அவை பணிபுரியும் நபர்களுக்கு வேலை நேரத்தின் அனைத்து நேரங்களிலும், அணுகக்கூடியவாறு மிகவும் வசதியானதாக அமைந்திருத்தல் வேண்டும்.
குடிநீர் வசதியுடன் கூடிய ஓய்வறை மற்றும் உணவறையினை ஏற்பாடு செய்து தருதல் வேண்டும். ஓய்வறை மற்றும் உணவறையானது, போதிய காற்றோட்டத்துடனும் வெளிச்சத்துடனும் இருத்தல் வேண்டும் மற்றும் அவை சுத்தமாகவும் சீரொழுங்காகவும் பராமரிக்கப்படுதல் வேண்டும்.
ஓய்வறை மற்றும் உணவறையானது, போதிய நாற்காலிகள் அல்லது சாய்வு இருக்கைகளுடன் அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும். நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு முதலுதவி வசதிகளை பணிபுரியும் இடத்தில், ஏற்பாடு செய்து தருதல் வேண்டும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த சட்டத்தை கடைபிடிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் தொழிலாளர் நலத் துறைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

லேட்டஸ்ட் செய்திகள்
நடைபயணத்திற்கு தடை – நீதிமன்றத்தை நாடும் அன்புமணி.!
July 26, 2025
2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகை.!
July 26, 2025