வருமான வரித்துறையின் சோதனை; சார்பதிவாளர் அலுவலகங்களில் 3000 கோடி கணக்கில் இல்லை.!

தமிழகம் முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் நடந்த வருமான வரித்துறையின் சோதனையில் 3000 கோடி கணக்கில் வரவில்லை என தகவல்.
தமிழகத்தின் சில சார்பதிவாளர் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. நிலமதிப்பீடுகளை குறைவாகக் கணக்கு காட்டி பத்திரப்பதிவு செய்யப்படுவதாக புகார்கள் எழுந்ததை அடுத்து, சார்பதிவாளர் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் சென்னை, திருச்சி உள்ளிட்ட சார்பதிவாளர் அலுவலகங்களில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் சென்னையின் செங்குன்றம் மற்றும் திருச்சியின் உறையூர் பதிவு அலுவலகங்களில் கணக்கில் காட்டப்படாமல் 3000 கோடி பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில், பத்திரப்பதிவு செய்யப்பட்டதில், 2000 கோடிக்கு கணக்கில் வரவில்லை எனவும், இதேபோல் திருச்சி உறையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் 1000 கோடி கணக்கில் காட்டப்படவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
வருமான வரித்துறையினர் கடந்த 5 ஆண்டுகளில் பத்திரப்பதிவு செய்யப்பட்ட கணக்குகளை சரிபார்க்கும் போது, 3000 கோடி கணக்கில் வராதது கண்டறியப்பட்டுள்ளது.