தூத்துக்குடி விமான நிலைய திறப்பு விழா..தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!
தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.380 கோடியில் சர்வதேச தரத்தில் விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி வரும் 26-ஆம் தேதி மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு நேரடியாக தமிழகத்திற்கு வருகிறார். மாலத்தீவு சுதந்திர விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கும் அவர், அங்கிருந்து தூத்துக்குடிக்கு இரவு 8 மணியளவில் வந்தடைகிறார். இந்தப் பயணம் முன்னர் அறிவிக்கப்பட்ட 27 மற்றும் 28-ஆம் தேதிகளுக்குப் பதிலாக ஒரு நாள் முன்னதாக மாற்றப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் பிரதமருக்கு பாஜக சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.380 கோடி மதிப்பில் சர்வதேச தரத்தில் விரிவாக்கப்பட்ட புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இந்த விமான நிலையம் அதிநவீன வசதிகளுடன், 3,000 மீட்டர் ஓடுதளமாக விரிவாக்கப்பட்டு, ஒரே நேரத்தில் ஐந்து விமானங்களை நிறுத்தும் திறனுடன் உள்ளது. இதனால் இரவு நேர விமான சேவைகளும் இனி சாத்தியமாகும். தற்போது சென்னை மற்றும் பெங்களூருக்கு 9 விமானங்கள் இயக்கப்படும் இந்த விமான நிலையம், மேலும் வளர்ச்சி பெற உள்ளது.
விமான நிலைய திறப்பு விழாவைத் தொடர்ந்து, பிரதமர் மோடி ரூ.4,500 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இதில் சேத்தியாதோப்பு-சோழபுரம் நான்கு வழிச்சாலை (ரூ.2,357 கோடி), தூத்துக்குடி துறைமுக ஆறு வழிச்சாலை (ரூ.200 கோடி), மதுரை-போடிநாயக்கனூர் மின்மய ரயில் பாதை (ரூ.99 கோடி), மற்றும் நாகர்கோவில்-கன்னியாகுமரி ரயில் பாதை இரட்டிப்பாக்குதல் (ரூ.650 கோடி) ஆகியவை அடங்கும். மேலும், கூடங்குளம் அணுமின் நிலையத்தின் மின் பரிமாற்ற அமைப்பு பணிகளுக்கு (ரூ.548 கோடி) அடிக்கல் நாட்டுகிறார்.
தூத்துக்குடி நிகழ்ச்சிகளை முடித்த பின்னர், பிரதமர் மோடி இரவு 9:30 மணிக்கு இந்திய விமானப்படை விமானம் மூலம் திருச்சிக்கு புறப்படுகிறார். அங்கு இரவு தங்கிய பிறகு, 27-ஆம் தேதி காலை அரியலூர் மாவட்டத்திலுள்ள கங்கைகொண்ட சோழபுரத்திற்கு செல்கிறார். அங்கு ராஜேந்திர சோழனின் திருவாதிரை பிறந்தநாள் விழாவில் பங்கேற்கிறார். முன்னதாக, 700 மீட்டர் தூரத்திற்கு ரோடு ஷோ நடத்தவும், பாஜக நிர்வாகிகளை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார். கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் விழாவில், பிரதமர் மோடி ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார். மேலும், இளையராஜாவின் திருவாசகம் சிம்பொனி இசை நிகழ்ச்சியை கண்டு களித்து, ஆதீனங்கள் மற்றும் சாதுக்களுடன் உரையாட உள்ளார். இந்த விழாவிற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காலை 10 முதல் 12 மணி வரை இந்நிகழ்ச்சிகளில் பிரதமர் பங்கேற்கிறார்.தூத்துக்குடி மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் நிகழ்ச்சிகளை முடித்த பின்னர், பிரதமர் மோடி தஞ்சை செல்வாரா அல்லது டெல்லி திரும்புவாரா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இவரது வருகையை முன்னிட்டு, தூத்துக்குடியில் இந்திய விமான நிலைய ஆணையத் தலைவர் விபின் குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் தெற்கு மாவட்டத் தலைவர் சித்ராங்க தன் ஆகியோர் முன்னெடுப்பில் பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.