குழந்தையின் கை அகற்றம்! விசாரணை அறிக்கையில் முரண்பாடுகள் உள்ளன – தாய் அஜிஷா பேட்டி

குழந்தையின் கை அகற்றப்பட விவகாரத்தில் அரசு வழங்கிய அறிக்கையை நான் ஏற்க மாட்டேன் என குழந்தையின் தாய் பேட்டி.
ராமநாதபுரத்தை சேர்ந்த தஸ்தகீர் மற்றும் அஜீஷா தம்பதியின் ஒன்றரை வயது குழந்தையின் கை ராஜீவ் காந்தி அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக இன்று விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. செவிலியர்களின் அலட்சியத்தால் தான் குழந்தையின் கை அழுகியதாகவும், அதனால் தான் கையை அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் குழந்தையின் தயார் புகார் கூறியிருந்தார்.
அமைச்சர் உத்தரவின் பெயரில் மருத்துவர்கள் குழு விசாரணை மேற்கொண்டதை அடுத்து, இன்று விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், குழந்தைக்கு ஒருவகை கிருமி பாதிப்பு ஏற்பட்டு அது மூளை தொற்றாக மாறியிருந்தது. அதன் காரணமாக தான் குழந்தையின் கை அழுகியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குழந்தையின் உடலில் மருந்தை தவறான இடத்தில் போடவில்லை என்றும், குழந்தை உடலில் செலுத்திய மருந்தினால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றுள்ளனர்.
மேலும், கடந்த 29ம் தேதி குழந்தையின் கை நிறம் மாறியுள்ளது. இதனை தாய் மற்றும் செவிலியர்களிடம் தெரிவித்தவுடன் உடனடியாக மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டனர். பின்னர் 30ம் தேதி மருத்துவர்கள் குழந்தையின் உடல் நிலையை ஆய்வு செய்துள்ளனர். அதற்கு பிறகு குழந்தையின் உயிரை காப்பாற்றவே அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் குழந்தையின் உயிரை காப்பாற்றினர் என விசாரணை குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் சிகிச்சை காரணமல்ல எனவும் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், குழந்தையின் கை அகற்றம் குறித்து மருத்துவக்குழு விசாரணை அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், சென்னையில் குழந்தையின் தாய் அஜிஷா பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், மருத்துவக்குழு வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கையில் முரண்பாடுகள் உள்ளன.
இதனால், குழந்தையின் கை அகற்றப்பட விவகாரத்தில் அரசு வழங்கிய அறிக்கையை நான் ஏற்க மாட்டேன். மருத்துவக்குழு மருத்துவர்களை மட்டுமே விசாரித்தது, சிகிச்சையின்போது இருந்தவர்களை விசாரிக்கவில்லை. 29-ஆம் தேதி மருத்துவர் குழந்தையின் நிறம் மாறியதை அறிக்கையில் கூறியுள்ளனர். கடந்த 29ம் தேதியே குழந்தையின் கை நிறம் மாறியது, அப்போதே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.
குழந்தைக்கு ஏற்பட்ட பாதிப்பின் தன்மை குறித்து மருத்துவர்கள் கூறியது தவறு. மருத்துவர்கள், செவிலியர்களால் தான் குழந்தையின் கை அகற்றப்பட்டது. எனக்கு நீதி கிடைப்பதை அரசும், முதலமைச்சரும் உறுதி செய்ய வேண்டும். இனி எந்த குழந்தைக்கும் இதுபோல் ஏற்பட கூடாது என்பதற்காக தான் போராடி வருகிறோம். குழந்தைக்கு அளித்த சிகிச்சை குறித்த ஆவணங்களை முழுமையாக அளிக்க வேண்டும். குழந்தையின் கை அகற்றப்பட்டதற்கு மருத்துவர்களே காரணம். விசாரணைக்குழு அரசு மருத்துவர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்றுள்ளார்.