தமிழ்நாடு பாஜக மையக்குழு நிர்வாகிகள் இன்று ஆலோசனை!

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய நிலையில், இம்முறை தேர்தலில் மும்முனை போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. கூட்டணி முறிவிற்கு பிறகு இரு கட்சிகளும் மவுனமாக இருந்ததால், கூட்டணிக்கு மீண்டும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், தொண்டர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் கூட்டணியில் இருந்து விலகிவிட்டோம் என்றும் இனி பாஜகவுடன் கூட்டணி கிடையாது எனவும் அதிமுக திட்டவட்டமாக தெரிவித்தது.
வரும் தேர்தலில் அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமைத்து தேர்தல் களத்தில் போட்டியிடுவோம் என தெரிவிக்கப்பட்டது. பாஜகவை பொறுத்தவரையில் இன்னும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ஒரு தரப்பில் கூறப்பட்ட நிலையில், அண்மையில் தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடப்பாடியுடன் கூட்டணி வேணாம் என கூறியதாகவும் தகவல் வெளியானது.
அப்போது பாஜக நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் அண்ணாமலை பேசுகையில், அதிமுக – பாஜக கூட்டணி முறிவில், நம்மிடம் இருந்து பிரிந்து செல்பவர்கள் செல்லட்டும், அது அவரவர் தனிப்பட்ட விருப்பம். கூட்டணி முறிவு பற்றி தேசிய தலைமையிடம் விளக்கம் அளித்துள்ளேன். இனி தேசிய தலைமை முடிவு செய்யும் என கூறினார். இதனால், வரும் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட ஆயுதமாவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சென்னையில் இன்று மதியம் பாஜக மையக்குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளனர். அதன்படி, பாஜக நிர்வாகி பிஎஸ் சந்தோஷ் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலையும் பங்கேற்கவுள்ளார். கூட்டணி முறிவை அதிமுக அறிவித்த நிலையில், பாஜக மாநில மையக்குழு நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.