திருப்பூர் : தோப்பு வீட்டில் பயங்கரம்! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் வெட்டி கொலை!

திருப்பூர், அவிநாசிபாளையம் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய், மகன் ஆகிய 3 பேர் வெட்டிகொலை செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Murder

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அவிநாசிபாளையம் பகுதியில் உள்ள சேமலைக்கவுண்டம்பாளையம் கிராமத்தில் தெய்வசிகாமணி, அலமாத்தாள் எனும் வயதான தம்பதி தங்களுக்கு சொந்தமான தோப்பு வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர்.

இவர்களது மகன் செந்தில்குமார் கோவையில் ஓர் தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு கவிதா எனும் மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். நேற்று செந்தில் குமார் கோவையில் இருந்து கிராமத்தில் ஒரு குடும்ப விசேஷத்திற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இப்படியான சூழலில் நேற்று நள்ளிரவு ஒரு மர்ம கும்பல் தெய்வசிகாமணி தோப்பு வீட்டிற்குள் நுழைந்து அவரை வெட்டியுள்ளனர். இதனை தடுக்க வந்த மனைவி அலமாத்தாள் , மகன் செந்தில் குமாரையும் அந்த கும்பல் சரமாரியாக ஆயுதங்களால் தாக்கியுள்ளனர் எனக் கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இன்று காலையில் அப்பகுதி மக்கள் மூவரின் உடலை கண்டு அதிர்ச்சியடைந்து, இந்த கொடூர கொலை சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தடவியல் நிபுணர் குழு மற்றும் மோப்ப நாய்களுடன் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, திருட்டு சம்பவம் தொடர்பாக இந்த கொலை சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்றும், 8 பவுன் தங்க நகை காணவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இன்னும் போலீசார் விசாரணை தொடர்ந்து வருவதால் உறுதியான தகவல்கள் பின்னர் தெரியவரும் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்