தமிழகத்தில் டிசம்பர் இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – அமைச்சர் கே.என்.நேரு

அரசாங்கத்தை பொறுத்தளவில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் உறுதியாக உள்ளது என அமைச்சர் கே.என் நேரு தகவல்.
இதுதொடர்பாக சென்னை அடையாறில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு, தமிழகத்தில் கிட்டத்தட்ட புதிதாக 6 மாநகராட்சிகள், 30க்கும் மேற்பட்ட நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது.
பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும், நகராட்சிகள் மாநகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. வார்டு வரையறை உள்ளிட்ட பணிகள் நிறைவடையாமல் உள்ளன. தேர்தலுக்கான வார்டுகள் மறுவரையரை செய்ய வேண்டியுள்ளது.
வார்டு மறு வரையறை பணிகளை மாநில தேர்தல் ஆணையம் துரிதப்படுத்தி உள்ளது. மறுவரையறைக்காக 100 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டியுள்ளது. இந்த 100 நாட்கள் முடிந்த பிறகு, பொதுமக்களின் குறைகளை மீண்டும் களைந்திட மேலும் 30 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டியுள்ளது. அரசாங்கத்தை பொறுத்தளவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் உறுதியாக உள்ளது.
நீதிமன்ற உத்தரவை பொறுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்படும். தமிழகத்தில் டிசம்பர் மாதத்திற்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு முயற்சி எடுத்து வருவதாகவும், ஓரிரு மாதங்கள் கூடலாம் என்றும் அல்லது குறையலாம் அல்லது அதே நேரத்தில் நடத்தலாம் எனவும் தெரிவித்துள்ளார்.