தவெக தலைவர் விஜய் மற்றும் தொண்டர்கள் மீது வைஷ்ணவி புகார்.!
தவெக தொண்டர்கள் மற்றும் அவர்களைக் கண்டித்து அறிக்கை வெளியிடாத விஜய் மீது கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வைஷ்ணவி புகார் அளித்துள்ளார்

கோவை : அண்மையில், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இருந்து விலகி திமுகவில் இணைந்த வைஷ்ணவி, தவெக தலைவர் விஜய் மற்றும் அவரது தொண்டர்கள் மீது சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி அவதூறாகவும், கேலிசித்திரங்கள் மூலமாகவும் பதிவுகள் இடப்பட்டதாக குற்றம்சாட்டி, கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரில், தான் தவெகவில் இருந்து விலகி, திமுகவில் இணைந்த பிறகு தவெகவினர் சமூக வலைதளங்களில் ஆபாசமாகவும், அவதூறாகவும் படங்களை மார்ஃப் செய்து பரப்புவதாகக் கோவை மாநகர காவல் ஆணையரிடம் வைஷ்ணவி புகார் அளித்துள்ளார்.
இதனால், தவெக தொண்டர்கள் மற்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத விஜய் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை வைத்துள்ளார். மேலும், வைஷ்ணவி முன்னதாக தவெகவில் பெண்கள் புறக்கணிக்கப்படுவதாகவும், பெண்கள் மக்கள் பிரச்சினைகளை பேச வேண்டாம் என்று கூறப்படுவதாகவும், கட்சி பெண்களை பிற்போக்குத்தனமாக நடத்துவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, சீரியல் நடிகையும் குக் வித் கோமாளி பிரபலமுமான ஷபானா, வைஷ்ணவியின் கருத்துகளை விமர்சித்து, விஜய் கோடிக்கணக்கான மக்களால் கொண்டாடப்படும் ஒருவர் எனவும், பேசும் வார்த்தைகளில் கவனமாக இருக்குமாறும் சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார்.