மக்களின் அன்புக்காக நடைபயணம்.! அண்ணாமலை பேட்டி.!

168 நாட்களில் 234 தொகுதிகளில் 1,700 கி.மீ தூரம் என் மண் என் மக்கள்’ என்ற நடைபயணம் மேற்கொள்ள உள்ளேன் என அண்ணாமலை பேட்டி.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் கூட்டணி மற்றும் ஆளும் கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த சமயத்தில், தமிழகத்தில் ஊழலுக்கு எதிராகவும், அனைவருக்கும் நலத்திட்டங்கள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையிலும், ‘என் மண் என் மக்கள்’ என்ற பாத யாத்திரையை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாளை (ஜூலை 28-ம் தேதி) ராமேஸ்வரத்தில் தொடங்குகிறார்.
நாளை தொடங்கும் பாத யாத்திரை:

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பாத யாத்திரயை தொடங்கி வைக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை ராமேஸ்வரம் வருகிறார். இதற்காக ராமேஸ்வரத்தில் 2500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அண்ணாமலையின் பாத யாத்திரை தொடக்க விழாவில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி தலைவர்களான முன்னாள் முதல்வர் பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.
சிறப்பு வாகனம்:
அண்ணாமலை ஓய்வெடுப்பதற்காக பல வசதிகளை கொண்ட வாகனம் தயாராகியுள்ளது. அதனை பாஜகவினர் தங்களின் முகநூலில் அண்ணாமலையில் தேர் என்று பதிவிட்டு வருகின்றனர். நாளை ராமேஸ்வரத்தில் தொடங்கும் அண்ணாமலை, பரமக்குடி, திருவாடானை, சிவகங்கை மற்றும் திருப்பத்தூரிலும் நடைபயணம் மேற்கொண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி கன்னியாகுமரி சென்றடைகிறார்.
தமிழகத்தின் வரலாற்றை மாற்றியமைக்க இருக்கும் தலைவர் அண்ணாமலையின் தேர்…
புறப்படுகிறது இராமேஸ்வரத்திலிருந்து…@annamalai_k @iamradioguru @EnMannEnMakkal pic.twitter.com/lTZMCPyXTW
— Dharani R Murugesan (@Dharaniramnad) July 26, 2023
புகார் பெட்டி:
கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 3 நாட்கள் பல்வேறு இடங்களில் நடைபயணம் சென்று தொண்டர்களையும் பொதுமக்களையும் சந்திக்கவுள்ளார். இந்த நடை பயணத்தில் புகார் பெட்டியும் வைக்கப்படவுள்ளது. இதில், திமுக அரசின் செயல்பாடுகள் மற்றும் மக்களின் கோரிக்கைகள் குறித்து புகார் பெட்டியில் மனுவாக அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புக்காக நடைபயணம்:

இந்த நிலையில், ராமேஸ்வரத்தில் ‘என் மண் என் மக்கள்’ என்ற பாத யாத்திரை நாளை தொடங்க உள்ள நிலையில், மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மக்களின் அன்புக்காக நடைபயணம், பிரதமர் மோடியின் சாதனை குறித்த விளக்கபுத்தகம் வெளியிடப்படும். பாஜகவின் ஆட்சி கால சாதனைகள் குறித்து 1 லட்சம் புத்தகங்கள் விநியோகிக்க உள்ளோம். தமிழகத்தில் நடைபெறும் எல்லா பொதுக்கூட்டங்களிலும் ஒரு மத்திய அமைச்சர் பங்கேற்பார். நாளை ராமேஸ்வரத்தில் தொக்க விழா மட்டுமே நடைபெறும்.
என்எல்சி விவகாரம்:
168 நாட்களில் 234 தொகுதிகளில் 1,700 கி.மீ தூரம் என் மண் என் மக்கள்’ என்ற நடைபயணம் மேற்கொள்ள உள்ளேன். 10 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்த உள்ளோம். நாளைய நிகழ்ச்சியில் பங்கேற்பதை எடப்பாடி பழனிசாமி இன்னும் உறுதிபடுத்தவில்லை என்றார். மேலும் கூறுகையில், என்எல்சி விரிவாக்கம் தேவை, ஆனால் அதை முறையாக செய்ய வேண்டும். மாநில அரசுதான் நிலங்களை என்எல்சிக்காக கையகப்படுத்தி கொடுக்கிறது.
திமுக அரசின் ஊழல்கள்:

நெல் வயலில் ஜேசிபி இயந்திரத்தை இறக்கி நிலம் கையகப்படுத்துவதை ஏற்க முடியாது. திமுக பைல்ஸ் 2-ல் பல்வேறு ஊழல் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளன. திமுக அரசின் ஊழல்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம். ஊழல் ஒழிப்பு கண்காணிப்புத்துறையிலும் புகார் அளிக்க உள்ளோம். அமைச்சர் பொன்முடி மீதான குற்றசாட்டுகளை முதலமைச்சர் மறுக்கிறாரா? எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.