திமுக அரசின் மெத்தன போக்கிற்க்கு நியாயவிலை கடைகளில் பணி புரிவோர் என்ன செய்வார்கள்..? – ஓபிஎஸ்

Default Image

பொங்கல் தொகுப்பில் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் அனைத்துப் பொருட்களும் கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் உள்ள பொருட்கள் தரமற்று இருப்பதாகவும், எல்லோருக்கும் 21 பொருட்கள் கிடைக்கவில்லை என்றும் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் அனைத்துப் பொருட்களும் கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2020-ஆம் ஆண்டு ஆயிரம் ரூபாய் ரொக்கம் உட்பட 2,363 கோடி ரூபாய் மதிப்பிலான பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. 2021-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் நிதி உதவி உட்பட 5,604 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் 2,500 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டபோது, 5,000 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்று கூறியது தி.மு.க. இதுபோன்று பலவற்றைக் கூறி மக்களை ஏமாற்றி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த தி.மு.க., 2022-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரொக்கம் இல்லாமல் வெறும் பொங்கல் தொகுப்பினை மட்டும் 1,159 கோடி ரூபாய் மதிப்பில் துணிப்பை உட்பட 21 பொருட்களை வழங்க ஆணையிட்டது. இந்தப் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணிகள் இந்த மாதம் நான்காம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன.

தி.மு.க. அரசின் அறிவிப்பிற்கு இணங்க பொங்கலுக்குத் > தேவையான பொருட்கள் மற்றும் பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான பொருட்கள் வழங்கப்படுகின்றனவா என்று பார்த்தால் அதிலும் பெரும் குளறுபடி நடந்திருப்பதாக பொருட்களை பெற்றுச் செல்லும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் உள்ள பொருட்கள் தரமற்று இருப்பதாகவும், எல்லோருக்கும் 21 பொருட்கள் கிடைக்கவில்லை என்றும், பெரும்பாலான பைகளில் 5 முதல் 6 பொருட்கள் குறைவாக இருப்பதாகவும், இருக்கின்ற பொருட்களின் பொட்டலங்கள் திறந்து இருப்பதாகவும், சில பகுதிகளில் துணிப்பை கொடுப்பதில்லை என்றும் ஆங்காங்கே பொதுமக்கள் குறை கூறும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல், சில பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் வழங்கிய வெல்லம் பாகுபோல் உருகியுள்ளதாகத் தகவல் வருகிறது. இதுகுறித்து – நியாய விலைக் கடைகளில் பணிபுரிவோரிடம் கேட்டால் எங்களுக்கு என்ன வருகிறதோ அதைத்தான் நாங்கள் வழங்க முடியும் என்று வேதனையோடு அவர்கள் தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது. தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கிற்கு நியாய விலைக் கடைகளில் பணிபுரிவோர் என்ன செய்வார்கள்?

இந்தச் சூழ்நிலையில், மாண்புமிகு உணவுத் துறை அமைச்சர் அவர்கள், எல்லா நியாய விலைக் கடைகளிலும் பொருட்களின் பட்டியலை வைக்கவும், அனைத்து பொருட்களும் உள்ளனவா என்று சரிபார்க்க குடும்ப அட்டைதாரர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும், இந்த மாதம் 31-ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்து இருப்பதாகச் செய்தி வந்துள்ளது. குடும்ப அட்டைதாரர்கள். சரிபார்த்து புகார் கொடுப்பதால்தான் இந்தப் பிரச்சனையே எழுகின்றது. இதன் காரணமாக பல நியாய விலைக் கடைகளில் வாக்குவாதம் ஏற்படுகிறதேயொழிய பொருட்கள் மக்களைச் சென்றடையவில்லை.

இது தவிர, இப்போது வாங்காமல் விட்டுவிட்டால் பின்னர் கிடைக்காது என்ற * சந்தேகமும் மக்கள் மனங்களில் எழுந்துள்ளது. எனவே, அனைத்துப் பொருட்களும் இருக்கிறதா என்பதை உறுதி செய்து நியாய விலைக் கடைகளுக்கு வழங்க வேண்டிய கடமை அரசுக்குத்தான் இருக்கிறது. இதை அரசு செய்ய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இந்தப் பொங்கல் பரிசுத் தொகுப்பே இந்த மாதம் 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்பதற்காகத்தான். இந்த நிலையில், தவிர்க்க இயலாத காரணங்களால் தொகுப்பை பெற இயலாதவர்கள் இந்த மாதம் 31-ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்பது எந்த நோக்கத்திற்காக இந்தப் பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டதோ, அந்த நோக்கத்தை சிதைக்கும் வகையில் அமைந்துள்ளது. ரொக்கமாக இருந்தால், கடன் வாங்கி பொங்கல் பண்டிகையைக் கொண்டாடிவிட்டு பின்னர் அதை திருப்பிச் செலுத்திவிடலாம். ஆனால், தற்போது தி.மு.க. ஆட்சியில் வழங்கப்படுவதோ வெறும் தொகுப்பு. அதை வைத்து என்ன செய்ய முடியும்?

எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி, பொங்கல் பண்டிகைக்கு முன்பே அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் அனைத்துப் பொருட்களும் நல்ல முறையில் கிடைக்கவும், ஏற்கெனவே வாங்கியத் தொகுப்பில் குறைபாடு இருந்தால், அதனைச் சரி செய்யவும் ஆவன செய்திட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts
Indian Army Pulverizes Terrorist Launchpads
Virat Kohli - TEST Cricket
Vikram Misri