ட்ரம்ப்புடன் மோதல்..புதிய கட்சியை தொடங்கியதாக அறிவித்த எலான் மஸ்க்!
வரி விவகாரத்தில் ட்ரம்ப் உடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாக புதிய கட்சி தொடங்குவேன் என கூறி வந்த மஸ்க் புதிய கட்சியை தொடங்கியதாக அறிவித்தார்.

நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க பார்ட்டி’ (The America Party) என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கியதாக ஜூலை 5, 2025 அன்று அறிவித்தார். அமெரிக்கர்களின் சுதந்திரத்தை மீட்டெடுப்பதே இந்தக் கட்சியின் முக்கிய நோக்கம் என்று அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்தார். “வாக்காளப் பெருமக்களே, நமது நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் வீண் செலவுகளை எதிர்த்து, உங்களுக்கு சுதந்திரத்தை திரும்ப வழங்குவதற்காக இன்று ‘தி அமெரிக்க பார்ட்டி’ உருவாக்கப்பட்டுள்ளது,” என்று மஸ்க் பதிவிட்டார்.
இந்த அறிவிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடனான வரி மற்றும் செலவு தொடர்பான சர்ச்சைக்குரிய மசோதா (One Big Beautiful Bill) குறித்த கருத்து வேறுபாடு காரணமாக வந்துள்ளது. இந்த மசோதா, 3.3 ட்ரில்லியன் டாலர் கடனை அதிகரிக்கும் என்று மஸ்க் விமர்சித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, இரு கட்சி அமைப்பையும் (ரிபப்ளிகன் மற்றும் டெமாக்ரடிக்) ‘ஒரே கட்சி’ (uniparty) என்று கடுமையாக விமர்சித்த மஸ்க், புதிய கட்சி தொடங்குவதற்கு ஆதரவு தேடி, எக்ஸ் தளத்தில் நடத்திய கருத்துக் கணிப்பில் 80% பேர் ஆதரவு தெரிவித்ததாகக் கூறினார்.
முன்னதாக, ட்ரம்ப்பின் 2024 தேர்தல் பிரசாரத்திற்கு 280 மில்லியன் டாலருக்கும் மேல் நிதியுதவி செய்து, அவரது நெருங்கிய ஆலோசகராக இருந்த மஸ்க், ‘டிபார்ட்மென்ட் ஆஃப் கவர்ன்மென்ட் எஃபிஷியன்சி’ (DOGE) தலைவராகவும் பணியாற்றினார். ஆனால், ட்ரம்ப்பின் மசோதாவை எதிர்த்து மே 2025-ல் அந்தப் பதவியை ராஜினாமா செய்தார். இந்த மசோதாவை அவர் “நாட்டை திவாலாக்கும்” என்று கடுமையாக விமர்சித்து, புதிய கட்சி தொடங்குவேன் என்று முன்னரே எச்சரித்திருந்தார்.