தற்காலிகமாக விலகிய தவெக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்! காரணம் என்ன?

பீகார் சட்டமன்ற தேர்தலில் கவனம் செலுத்துவதாகக் கூறி தவெக ஆலோசகராகச் செயல்படுவதிலிருந்து தற்காலிகமாக விலகுவதாக பிரசாந்த் கிஷோர் அறிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

prashant kishor tvk

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக, பாஜகவைப் போலவே தனித்தனி குழுவை அமைத்து செயல்படுத்தி வருகிறது. விஜய்யின் தலைமையில் இயங்கும் இந்தக் கட்சிக்கு, ஜான் ஆரோக்கிய சாமி, ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் ஏற்கனவே ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். மேலும், பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், தனது சிம்ப்பிள் சென்ஸ் அனல்ட்டிக்ஸ் நிறுவனத்தின் மூலம், தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் தவெகவிற்கு உத்திகளை வகுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் நடந்த தவெகவின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில், பிரசாந்த் கிஷோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். “விஜய் ஒரு வழக்கமான அரசியல் தலைவர் இல்லை. அவர் தமிழகத்தின் புதிய நம்பிக்கையாக உருவாகியுள்ளார். தவெக, புதிய அரசியல் மாற்றத்தை விரும்பும் மக்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம். இந்த மாற்றத்திற்கு நானும் ஒரு சிறு பங்காற்றுவேன்,” என்று அவர் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, அவரது நிறுவனம் தவெகவுடன் இணைந்து, மாநிலம் முழுவதும் தேர்தல் உத்திகளை உருவாக்கி வந்தது.

இருப்பினும், பிஹார் சட்டமன்றத் தேர்தலில் (நவம்பர் 2025) பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி போட்டியிடுவதால், அவர் தற்போது அங்கு தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதனால், தவெகவிற்கு ஆலோசனை வழங்குவதில் இருந்து அவர் தற்காலிகமாக விலகியுள்ளார். பிஹார் தேர்தல் முடிந்த பிறகு, நவம்பர் 2025-க்கு பிறகு மீண்டும் தவெகவின் ஆலோசகராக இணைவது குறித்து முடிவு செய்வேன் என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த மாற்றம், தவெகவின் தேர்தல் தயாரிப்பில் தற்காலிக தாக்கத்தை ஏற்படுத்தினாலும், விஜய்யின் தலைமையில் கட்சி தனது உத்திகளை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. ஜான் ஆரோக்கிய சாமி, ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட உள்ளூர் ஆலோசகர்கள், தமிழகத்தின் அரசியல் சூழலுக்கு ஏற்ற உத்திகளை வகுப்பதில் முக்கிய பங்காற்றி வருகின்றனர். 2026 தேர்தலை முன்னிட்டு, தவெகவின் இந்த தயாரிப்புகள் மற்றும் பிரசாந்த் கிஷோரின் மீள்வருகை குறித்து தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்