பயங்கரவாதத்தை ஒழிக்க பிரான்சுடன் இணைந்து செயல்பட உள்ளோம்.! பிரதமர் மோடி பேச்சு.!

பயங்கரவாதத்தை ஒழிக்க பிரான்சுடன் இணைந்து செயல்பட உள்ளோம் என பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டில் பேசியுள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கபட்டு இருந்தது. அதன்படி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பிரான்ஸ் சென்று இருந்தார் பிரதமர் மோடி. நேற்று பிரான்ஸ் நாட்டின் தேசிய விழாவில் பிரதமர் மோடி பிரானஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆகியோர் கலந்து கொண்டு இருந்தனர்.
முதல் நாளில் பிரான்சில் வாழும் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, திருவள்ளுவர் சிலை பிரான்சில் அமைக்கப்படும் என்றும், தமிழ் மொழியின் பெருமைகள் பற்றியும் பேசி இருந்தார். இதனை தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் மற்றும் அவரது மனைவி சார்பில் பிரதமருக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது. மேலும் கிராஸ் தி லெஜியன் ஆப் ஹானர் எனும் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது.
அதேபோல் பிரதமர் மோடியும் இந்தியாவில் இருந்து சந்தன கட்டையால் செய்யப்பட்ட இசைக்கருவி நினைவு பரிசை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேலுக்கு வழங்கினார். அதே போல அதிபரின் மனைவிக்கும் தெலுங்கானா பட்டு பரிசு பொருளை வழங்கினார்.
அதன் பிறகு இருநாட்டு தலைவர்களும் இருநாட்டு வளர்ச்சி பற்றியும், ராணுவ தளவாடங்கள் பற்றியும் கலந்து ஆலோசித்தனர். இதில் ராணுவம், விண்வெளி தொடர்பாக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. முக்கியமாக இரு நாடும் சேர்ந்து முக்கிய ராணுவ தளவாடங்களை மேம்படுத்துவது, நட்பு நாடுகளுக்கு ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்வது, விண்வெளி மற்றும் கடல் சார் சார்ந்த பல்வேறு ஒப்பந்தங்கள் குறித்தும் கையெழுத்து போடப்பட்டது. மேலும் பயங்கரவாதத்தை ஒழிக்க பிரான்ஸ் நாட்டோடு இணைந்து செயல்பட உள்ளதாகவும் பிரதமர் மோடி அந்த விழாவில் தெரிவித்து இருந்தார். இங்கு இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு தற்போது பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு தனி விமானம் மூலம் சென்றுள்ளார்.