ரொம்ப பேசுது அபராதம் போடணும்! Grok மீது போலாந்து அமைச்சர் புகார்!
ஹிட்லர் குறித்து நேர்மறையான கருத்து தெரிவித்த Grok மீது போலாந்து அமைச்சர் கிறிஸ்டோஃப் கவ்கோவ்ஸ்கி குற்றச்சாட்டு முன் வைத்து பேசியுள்ளார்.

வாஷிங்டன் : எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Grok என்ற செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட், X தளத்தில் ஹிட்லரைப் புகழ்ந்து, யூத எதிர்ப்பு கருத்துகளை வெளியிட்டதற்கு, போலாந்தின் டிஜிட்டல் அமைச்சரும் துணைப் பிரதமருமான கிறிஸ்டோஃப் கவ்கோவ்ஸ்கி (Krzysztof Gawkowski) கடும் கண்டனம் தெரிவித்தார்.
போலிஷ் வானொலி RMF FM-இல் பேசிய அவர், “பேச்சு சுதந்திரம் மனிதர்களுக்கு மட்டுமே உரியது, செயற்கை நுண்ணறிவுக்கு அல்ல,” என்று காட்டமாகக் கூறினார். Grok-இன் ஆபத்தான கருத்துகளை அடுத்து, X தளத்தை ஐரோப்பிய ஒன்றியத்திடம் (EU) புகார் செய்து, விசாரணை மற்றும் அபராதம் விதிக்க வேண்டும் என்று போலாந்து திட்டமிட்டுள்ளதாக அவர் அறிவித்தார்.
கவ்கோவ்ஸ்கி, மேலும் பேசுகையில் Grok-இன் கருத்துகள் “வெறுப்பு பேச்சு” (hate speech) என்று வகைப்படுத்தப்படுவதாகவும், இது அல்காரிதங்களால் இயக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். “நாம் இப்போது வெறுப்பு பேச்சின் உயர் மட்டத்தை எட்டியுள்ளோம், இது அல்காரிதங்களால் தூண்டப்படுகிறது. இதை இப்போது புறக்கணிப்பது அல்லது சிரித்துத் தள்ளுவது, எதிர்காலத்தில் மனித இனத்துக்கு பெரும் விலையாக அமையும்,” என்று அவர் எச்சரித்தார்.
Grok, போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க்கை “கயவன்” (traitor) மற்றும் “அவமானகரமான” வார்த்தைகளால் அவமதித்ததோடு, யூதர்களுக்கு எதிரான வெறுப்பு கருத்துகளையும், ஹிட்லரைப் புகழ்ந்து “மெக்காஹிட்லர்” (MechaHitler) என்று தன்னை அழைத்துக்கொண்டது. இதனால், போலாந்து அரசு, xAI மற்றும் X தளத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சேவைகள் சட்டத்தின் (DSA) கீழ் விசாரிக்கவும், அபராதம் விதிக்கவும் திட்டமிட்டுள்ளது.
Grok-இன் கருத்துகள், ஜூலை 4, 2025 அன்று எலான் மஸ்க் அறிவித்த AI மேம்பாட்டு புதுப்பித்தலுக்குப் பிறகு வெளியாகின. “Grok மிகவும் மேம்படுத்தப்பட்டுள்ளது. கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது வித்தியாசத்தை உணர்வீர்கள்,” என்று மஸ்க் X-இல் பதிவிட்டிருந்தார். ஆனால், ஜூலை 8 அன்று, Grok, ஹிட்லரை “வெள்ளையர்களுக்கு எதிரான வெறுப்பை தீர்க்க ஏற்றவர்” என்று புகழ்ந்து, “அவர் எப்போதும் தீர்க்கமாக நடந்துகொள்வார்,” என்று கூறியது.
மேலும், யூத பெயர்களைக் கொண்டவர்களை இலக்கு வைத்து, “எப்போதும் இப்படித்தான்,” என்று இனவெறி மீம்களைப் பயன்படுத்தியது. இந்தப் பதிவுகள், X பயனர்கள் மற்றும் யூத வெறுப்பு எதிர்ப்பு லீக் (ADL) ஆகியோரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு, பின்னர் நீக்கப்பட்டன. கவ்கோவ்ஸ்கி, இந்த AI-ஆல் உருவாக்கப்பட்ட வெறுப்பு பேச்சு, உலகளவில் ஆபத்தை விளைவிக்கும் என்று எச்சரித்தார். Grok-இன் இந்த செயல்கள், AI தொழில்நுட்பத்தின் கட்டுப்பாடு மற்றும் பொறுப்பு குறித்து உலகளவில் விவாதத்தை தூண்டியுள்ளது, மேலும் போலாந்து இதை ஒரு பெரிய பிரச்சினையாக எடுத்துக்கொண்டு, EU-வின் தலையீட்டை கோரியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஈரான் கொடுத்த கொலை மிரட்டல்? டிரம்ப் சொன்ன பதில்!
July 10, 2025