“இதுக்காக தான் அனுமதி கொடுக்கல”..மஸ்க் குற்றச்சாட்டு! தென் ஆப்பிரிக்கா விளக்கம் !
நமது நாட்டின் சட்டங்களைப் பின்பற்றவில்லை என்ற காரணத்தால் தான் எலான் மஸ்க்க்கு ஸ்டார் லிங்க் திட்டத்தை செயல்படுத்த அனுமதி கொடுக்கவில்லை என தென் ஆப்பிரிக்கா அரசு விளக்கம் அளித்துள்ளது.

எக்ஸ் தளத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் தன்னுடைய ஸ்டார் லிங்க் (Starlink) திட்டத்தை அனைத்து நாடுகளிலும் செயல்படுத்த முடிவெடுத்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார். ஏற்கனவே இந்த சேவை அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளில் செயல்படுகிறது. இந்த சூழலில், மஸ்க் தென் ஆப்பிரிக்காவிலும் செயல்படுத்த அந்நாட்டிடம் அனுமதி கேட்டிருந்தார்.
மறுப்பு & மஸ்க் குற்றச்சாட்டு
மஸ்க் தன்னுடைய ஸ்டார் லிங்க் (Starlink) திட்டத்தை தென் ஆப்பிரிக்காவில் அமல்படுத்த அனுமதி கேட்டிருந்த நிலையில், அனுமதி கொடுக்கமுடியாது என அந்நாட்டு நிர்வாகம் திட்டவட்டமாக கூறியது. இதனால் சற்று கடுப்பான மஸ்க் சில குற்றச்சாட்டுகளை முன் வைத்து பேசியது தான் தற்போது ஹாட் டாப்பிக்காக மாற்றியிருக்கிறது.
அனுமதி கொடுக்காதது குறித்து அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு எக்ஸ் வலைத்தள பக்கத்தில் போட்டிருந்த பதிவு ஒன்றில் ” நான் கறுப்பினத்தவர் இல்லை என்ற காரணத்தால் தான் என்னால் ஸ்டார் லிங்க் இணைய சேவை தென் ஆப்பிரிக்காவில் செயல்படுத்தமுடியவில்லை. இந்த சேவையை செயல்படுத்துவதற்கு எனக்கு யாரும் அங்கு அனுமதி தரவில்லை” என கூறி கறுப்பினத்தவர்களுக்கு (BEE) மட்டுமே அங்கு அனுமதி அளிக்கப்படுவதாக குற்றம்சாட்டி இருந்தார்.
மஸ்க் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டிருந்த BEE என்றால் Black Economic Empowerment என்று அர்த்தம். இது தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு அரசு விதிமுறை ஆகும். இந்த விதிமுறையின் படி, கருப்பினத்தவருக்கு வேலைவாய்ப்புகள், தொழில் வளர்ச்சி, முதலீட்டு வாய்ப்புகள் போன்றவற்றை அதிக அளவில் வழங்கவேண்டும் என்பதற்காக முந்தய காலகட்டங்களில் கொண்டு வரப்பட்டது. கருப்பினத்தவர்களுக்கு வேண்டிய பல விஷயங்கள் கிடைக்கவேண்டும் என்பதற்காக தான் அரசாங்கம் இந்த விதிமுறையை கொண்டு வந்தது. இதனைக்குறிப்பிட்டு தான் தனக்கு ஸ்டார் லிங்க் திட்டத்தில் அந்த நாட்டில் அனுமதி கிடைக்கவில்லை என மஸ்க் கூறியிருந்தார்.
தென் ஆப்பிரிக்கா கொடுத்த பதில்
மஸ்க் வைத்த குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்துள்ள தென் ஆப்பிரிக்கா நிர்வாகம் தெளிவான விளக்கம் அளித்து மஸ்க் குற்றச்சாட்டிற்கு பதில் அளித்துள்ளது. அதன்படி, மஸ்க் கூறுவது தவறான தகவல். அவருக்கு ஸ்டார் லிங்க் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டது என்பது BEE விதிகள் காரணமாக இல்லை. எந்தவொரு நிறுவனமாக இருந்தாலும், நமது நாட்டின் சட்டங்களைப் பின்பற்றி பதிவு செய்தால் அதற்கான சேவைகளை வழங்கலாம். ஆனால், மஸ்க் அதனை செய்யவில்லை. இதன் காரணமாக தான் அவருக்கு அனுமதி கொடுக்கவில்லை” என விளக்கம் அளித்தது.
இதனையடுத்து ஒரு பக்கம் மஸ்க் ஆதரவாளர்கள் BEE சட்டம் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்துகிறது எனவும், மற்றொரு பக்கம் மஸ்க் சரியாக சட்டத்தை பின்பற்றி அனுமதி கேட்காமல் அரசாங்கம் மீது பழி போடுகிறார் எனவும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள். இந்த விவகாரம் தென் ஆப்பிரிக்கா மற்றும் மஸ்க்கு இடையே பெரிய விவாதமாக மாறியுள்ள நிலையில், இதற்கு மஸ்க் பதில் அளிக்க வாய்ப்பு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.