மிரட்டிய டொனால்ட் டிரம்ப்! வரியை குறைக்க ஒற்றுக்கொண்ட இந்தியா?
இந்தியா வரி குறைத்தால் தான் அமெரிக்காவுடனான உறவு மேலும் வலுப்படும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து டொனால்ட் டிரம்ப் அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், சீனா, மெக்சிகோ, கனடாவுக்கு 25% சுங்க வரியை விதிக்க உள்ளதாக அறிவித்திருந்தார். அமெரிக்காவின் உள்நாட்டு தொழில்கள் பாதுகாக்கப்படும் என்பதால் கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்த வரியை விதிக்க தான் முடிவு செய்திருப்பதாகவும் திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கையாக இந்தியாவும் அமெரிக்காவுக்கு அதிகம் வரிவிதிப்பதாகவும் அதற்கு பதிலடி கொடுக்க நானும் அவர்கள் எவ்வளவு வரி விதிக்கிறார்களோ அதே போலவே விதிக்க நடவடிக்கை எடுக்கப்போகிறேன் எனவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசியிருந்தார். இதனையடுத்து, இன்று வெள்ளி மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்தியா வரிகுறைக்க ஒப்புக்கொண்டுவிடும் என பேசியிருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர் ” இந்தியாவில் எங்களால் எந்த பொருட்களை விற்பனை செய்ய முடியாத அளவுக்கு வரி அதிகமாக இருக்கிறது. நான் ஏற்கனவே, இது குறித்து பேசியிருந்தேன். இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்த பிறகு இந்தியா வரியை குறைக்க ஒப்புக்கொண்டுள்ளனர். அமெரிக்க பொருளாதாரத்திற்கு இழப்பு ஏற்படும் வகையில் எந்த நாடும் செயல்பட அனுமதிக்க மாட்டேன்.
அப்படி எந்த நாடு செய்தாலும் நிச்சயமாக நான் நடவடிக்கை எடுப்பேன். இந்தியாவின் வரிகள் உலகளவில் மிக அதிகமாக உள்ளன. அவற்றைக் குறைத்தால் அமெரிக்காவுடனான உறவு மேலும் வலுப்படும். அவர்களிடம் இன்னும் முழுவதுமான பேச்சுவார்த்தை முடியவில்லை. பேச்சுவார்த்தை முடிந்த பிறகு அவர்கள் அதற்கு ஒற்றுக்கொள்வார்கள் என்று தான் நான் நினைக்கிறேன். இந்தியா-அமெரிக்கா வர்த்தகம் விரிவடைய வேண்டுமென்றால், இந்திய அரசு தனது வரித் தடை நிபந்தனைகளை மாற்ற வேண்டும்.
இப்போது நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் அவர்கள் வரிக்குறைப்புக்கு ஒப்புக்கொண்டுள்ளார்கள். இருப்பினும், ஒரு வேலை அவர்கள் குறைக்கவில்லை என்றால் இந்தியா மீது பதிலடி வரி விதிக்க முடிவெடுத்துள்ளேன். இது ஏப்ரல் மாதத்தில் நடைமுறைக்கு வரும்” எனவும் எச்சரிக்கும் வகையில் டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார்.