,

மீண்டும் மீண்டுமா .. நியூசிலாந்தில் வரலாற்று சாதனை படைத்த பங்களாதேஷ்..!

By

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் இன்று டி20 தொடர் தொடங்கியது.

நேப்பியரில் நடந்த முதல் போட்டியில் பங்களாதேஷ் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.  அதன்படி முதலில் விளையாடிய நியூசிலாந்திற்கு ஆரம்பம் மிகவும் மோசமாக இருந்தது. டிம் சீஃபர்ட் (0), ஃபின் ஆலன் (1), கிளென் பிலிப்ஸ் (0) ஆகியோர் முதல் இரண்டு ஓவர்களிலேயே பெவிலியன் திரும்ப, அந்த அணி 1 ரன் மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது. ஐந்தாவது ஓவரில் 20 ரன்களில் டேரில் மிட்செலும் (14) வெளியேறினார்.

பின்னர் மார்க் சாப்மேன் மற்றும் ஜேம்ஸ் நீஷம் ஜோடி ஸ்கோரை 50 ரன்களுக்கு கொண்டு சென்றனர். ஆனால் சாப்மேன் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கேப்டன் மிட்செல் சான்ட்னர் 23 ரன்கள் எடுத்தார். அதிகபட்சமாக நீஷம் 29 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடினார். ஆடம் மில்னே 16 ரன்களுடன் கடைசி  ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் நியூசிலாந்து அணி  20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது.

பங்களாதேஷ் தரப்பில் ஷோரிபுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளையும், மஹேதி ஹசன், முஸ்தாபிசுர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 135 ரன்கள் இலக்கை துரத்திய பங்களாதேஷ் அணி பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டது. எனினும் பங்களாதேஷ் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அந்த அணி 13 ரன்களில் முதல் விக்கெட்டை இழந்தது. பின்னர் ரோனி தாலுக்தார் 10 ரன்களில் ஆட்டமிழக்க,  அதன்பின் களமிறங்கிய  நஸ்முல் ஹுசைன் சாண்டோவும் 19 ரன்னிலும், சௌமியா சர்கார் (22) ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார்கள்.

ஒரு பக்கம் பங்களாதேஷ் அணி விக்கெட்டுகள் விழுந்து கொண்டிக்க , ஆனால்  மறுபுறம் லிட்டன் தாஸ் சிறப்பாக விளையாடி ஆட்டமிழக்காமல் 42 ரன்கள் எடுத்து தனது அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார். இறுதியாக  பங்களாதேஷ் அணி 18.4 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 137 ரன்கள் எடுத்து நியூசிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து புதிய சாதனையையும் படைத்துள்ளது. 

பங்களாதேஷ் அணி மூன்று நாட்களுக்கு முன்பு நியூசிலாந்தில் தனது முதல் ஒருநாள் வெற்றியை பதிவு செய்து வரலாறு சாதனைபடைத்தது. இப்போது நியூசிலாந்து அணியை அதனுடைய சொந்த மண்ணில் டி20 சர்வதேச போட்டியிலும் வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்து வரலாறு சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்களாதேஷ் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

Dinasuvadu Media @2023